ஆயிரம் ஆண்டு பழமையான பாரம்பரியங்களை இந்தியா தொடர்ந்து பாதுகாக்கிறது: யோகி ஆதித்யநாத்

கோரக்பூர்,

உத்தர பிரதேசத்தின் அயோத்தி நகரில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு அதற்கான கும்பாபிஷேக விழா வருகிற 22-ந்தேதி நடைபெற உள்ளது. ராமர் சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் வருகிற ஜனவரி 15-ந்தேதிக்குள் நிறைவடைந்து விடும். அதன்பின் ஜனவரி 16-ந்தேதி சிலை பிரதிஷ்டை பூஜை தொடங்கி, தொடர்ந்து 22-ந்தேதி வரை நடைபெறும்.

இதற்காக பல்வேறு முக்கிய பிரமுகர்களுக்கும் அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார்.

இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் கோரக்பூர் நகரில் 3 நாட்களாக கோரக்பூர் திருவிழா 2024 நடந்தது. இதில், 3-வது நாளான நேற்று (சனிக்கிழமை) நடந்த நிறைவு விழாவில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பங்கேற்றார்.

அவர் பேசும்போது, அனைத்து மோதல்களுக்கு நடுவிலும் தங்களுடைய பாரம்பரியங்களை பாதுகாக்கும் திறன் பெற்றவர்கள் இந்தியர்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீராம் தோன்றினார். ஆனால், அவரால் தொடங்கி வைக்கப்பட்ட மரபுடன் ஒவ்வோர் இந்தியரும் தொடர்பில் இருக்கிறார்.

பாரம்பரியங்களை பாதுகாத்தலுக்கான மரபுகளின் முடிவே அது. அதற்கான போராட்டம் ஒவ்வொரு மட்டத்திலும் உள்ளது. அதனால், கடவுள் ராமர் வருகிற 22-ந்தேதி அயோத்தியில் உள்ள அவருடைய பெரிய கோவிலில் மீண்டும் அமர போகிறார் என கூறியுள்ளார்.

அயோத்தியை இலக்காக கொண்டு, கலாசாரம், நம்பிக்கையை தாக்கியவர்களை வீழ்த்தியதன் வழியே தங்களுடைய அடையாளங்களை இந்தியர்கள் மீட்டுள்ளனர். இந்த வெற்றிக்கான அடையாளங்களில் ஒன்றாக கடவுள் ஸ்ரீராமரின் சிலை நிறுவும் விழா அடுத்து நடைபெற உள்ளது என்றும் அவர் கூறினார்.

இதன்படி, பழமையான பாரம்பரியங்களை பாதுகாப்பதில் இந்தியர்கள் திறமை வாய்ந்தவர்கள் என்றும் ஆயிரம் ஆண்டு பழமையான பாரம்பரியங்களை இந்தியா தொடர்ந்து பாதுகாத்து வருகிறது. 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னரும், அதே ஆர்வத்துடன் நம்முடைய மரபுகளை நாம் கொண்டாடுகிறோம் என்றும் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.