கல்விக்கொள்கை: `பொய்… நகைப்புக்குரியது!' – தமிழ்நாடு அரசின் மறுப்பு அறிக்கை குறித்து அண்ணாமலை

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு செயற்கை நுண்ணறிவு எனும் AI தொழில்நுட்டதை பயிற்றுவிக்கும் விதமாக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் இணைந்து `மைக்ரோசாஃப்ட் TEALS’ திட்டத்தைப் பள்ளிகளில் தமிழ்நாடு அரசு கொண்டுவந்திருக்கிறது. இதனை வரவேற்ற தமிழ்நாடு பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, “வரும் கல்வி ஆண்டு முதல் செயற்கை நுண்ணறிவு (AI) பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தவிருப்பதாக உத்தரப்பிரதேச மாநில அரசு, கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பரில் அறிவித்திருந்த நிலையில், தமிழ்நாடு அரசும் தற்போது பள்ளிப் பாடத்திட்டத்தை மேம்படுத்த முயற்சிகளை மேற்கொள்வது பாராட்டுக்குரியது. பிரதமர் மோடி கொண்டுவந்த, புதிய கல்விக் கொள்கையை படிப்படியாகத் தமிழ்நாட்டில் செயல்படுத்திக் கொண்டிருக்கும் தமிழ்நாடு அரசு, தாய்மொழியை அடிப்படையாகக் கொண்ட மும்மொழி கல்விக் கொள்கையையும் விரைவில் தமிழ்நாட்டில் கொண்டு வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று ட்வீட் செய்திருந்தார்.

அண்ணாமலை

இதற்குத் தமிழ்நாடு அரசு, `அண்ணாமலை வரலாற்றை மாற்றவோ திரிக்கவோ முயலக் கூடாது. அண்ணாமலை பகல் கனவு காண்பது போல மும்மொழிக் கொள்கை ஒருபோதும் தமிழ்நாட்டில் உருவாக வாய்ப்பு இல்லை’ என எதிர்வினையாற்றியது.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் மறுப்பு அறிக்கை குறித்து பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “செயற்கை நுண்ணறிவு பயன்பாடு குறித்து 2018-ம் ஆண்டிலேயே அறிவிக்கப்பட்டு, 2019-ம் ஆண்டுக்கான தேசிய கல்விக் கொள்கை மாதிரி வடிவத்தில் குறிப்பிடப்பட்டு, பின்னர் 2020-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் மத்திய அரசு வெளியிட்ட புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளது. ஆனால், இது தொடர்பான தமிழக அரசின் கொள்கை வெளியிடப்பட்டது 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில்தான்.

அண்ணாமலை – முதல்வர் ஸ்டாலின்

தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்படும் முன்பாக தமிழகத்தில் இதற்கான கொள்கை உருவாக்கினோம் என்று அறிக்கையில் கூறப்பட்டிருப்பது பொய் என்பது இதன் மூலம் நிரூபணமாகியிருக்கிறது. கிண்டி பொறியியல் கல்லூரிக்கு ஐ.பி.எம் 1620 கணிப்பொறி வாங்கப்பட்ட ஆண்டு 1963. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு 1970 ஆம் ஆண்டு, பெரியார் செல்லும்வரை, அந்தக் கணிப்பொறி புதியதாக இருந்து என்று திமுக கூறுகிறதா…

பெரியார் பிறந்த தினமான செப்டம்பர் 17, 1879 அன்று புதன்கிழமை ஆகும். அவர் பிறந்த நாள் சனிக்கிழமை என்று கணிப்பொறி கூறியதாக மற்றுமொரு பிழை அறிக்கையில் இருக்கிறது. 1967-ம் ஆண்டு, அன்றைய பம்பாயிலும், பின்னர் 1990-களின் பிற்பகுதியில், பெங்களூர், சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பல மாநகரங்கள் தகவல் தொழில்நுட்பத்துறையில் வளர்ச்சியடையத் தொடங்கின. திறமை வாய்ந்த தமிழக இளைஞர்கள் மூலம், தமிழகம் இந்தத் துறையில் முன்னேறி வருகிறது. ஆனால், மற்ற மாநிலங்களுக்குத் தகவல் தொழில்நுட்பம் என்றால் என்னவென்றே தெரியாது என்ற ரீதியில் தி.மு.க அறிக்கை வெளியிட்டிருப்பது நகைப்புக்குரியது” என்று ட்வீட் செய்திருக்கிறார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.