இயற்கை வேளாண்மையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் இயற்கை விவசாயிகள் பலவித முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இயற்கை விவசாய விழிப்புணர்வை கிராமங்கள்தோறும் கொண்டு சேர்த்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரை போற்றி வருகின்றனர். அவரின் நினைவு தினமான டிசம்பர் 30-ம் தேதியில் ‘நம்மாழவார் நினைவேந்தல்’ நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த புதிய இடையூரில் உள்ள தமிழ்நிலம் தமிழ்ப்பண்ணை உணவுக்காட்டில் நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் நம்மாழ்வார் படத்திறப்புடன் மாநில திட்டக்குழு உறுப்பினர் சுல்தான் அகமது இஸ்மாயிலின் ‘WORMING my ways’ என்ற ஆங்கில நூலும், வானவனின் ‘ஓரக்குழி’ நூலின் அறிமுகமும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 250 இயற்கை விவசாயிகள் கலந்து கொண்டனர். சிறந்த இயற்கை வழி விவசாயிகளுக்கான நம்மாழ்வார் விருது இராணி பட்சிராஜன், செல்வராஜ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. மேலும், மறைந்த நெல் ஜெயராமன், இயற்கை உழவர்கள் சேஷாத்ரி மற்றும் கார்த்திகேயன் ஆகியோரின் படத்திறப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
நிகழ்ச்சி குறித்து நம்மிடம் பேசிய முன்னோடி இயற்கை விவசாயி இறையழகன், “நிகழ்வில் பங்கேற்ற ஒவ்வொரு விவசாயியும் தங்களது இயற்கை விவசாய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அவர்கள் இயற்கை விவசாயத்தின் மீது நாட்டம் கொண்டு, தமிழ்நிலம் தமிழ்ப்பண்ணை உணவுக்காட்டில் உள்ளதைப் போன்று ஒரு பண்ணையை வளர்த்தெடுக்க வேண்டும் என்று ஊக்கம் பெற்றனர். பசுமை சோலையான இந்தப் பண்ணையை சுமார் பத்தாண்டுகளில் வளர்த்து எடுத்துள்ளேன். இந்தப் பண்ணை உருவாவதற்கு நம்மாழ்வார் காரணம். அவர்தான் இதற்கான விதையை ஊன்றினார். இது போன்ற பண்ணைகள் நாடுதோறும் உருவாக வேண்டும்” என்றார்.
மாநில திட்டக்குழு உறுப்பினர் முனைவர் சுல்தான் அகமது இஸ்மாயில் பேசியதாவது, “ஒவ்வொருவரும் இயற்கை விவசாயம் பற்றி அறிந்து அதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

சமீபத்தில் வேளாண்மைத் துறை நடத்திய கூட்டத்தில் தரிசு நிலங்கள், பண்ணை நிலங்களிலும் மரம் வளர்ப்பை (Timberwood ) மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தனர். இதற்கு காரணம், அறுவடை செய்த மரங்கள் பேப்பர் தயாரிப்பு செய்யும் ஆலைகளுக்கு அனுப்பினால் வருமானம் கிடைக்கும் என்பதுதான்.

எங்கு மரம் வளர்த்தாலும் சரி, அந்த மரத்திலிருந்து காய்ந்த இலைகள் எங்கு விழுகிறதோ, அந்த இடத்தில் நுண்ணுயிரிகளும், மண்புழுக்களும் வாழ்கின்றன. இவை எப்படி அங்கு வாழ்கின்றன என்பதை பற்றிதான் என்னுடைய ஆராய்ச்சி. ஒரு மரம் வளர்க்கும்போது, அந்த மரத்தின் வேர் “வேர்வை” (சாறு ) கொடுக்கும். அதை வழக்கத்தில் எக்டோஹார்மோன் (Ectohormone) என்றழைப்பார்கள். இது அங்குள்ள நுண்ணுயிரிகளைக் கவரும். இது நாட்டுமரங்கள், பழமரங்கள் போன்ற ஒரு சில மரங்களுக்கு மட்டுமே உண்டு.
இரண்டாவதாக, நெல் பயிரிட தண்ணீர் அதிகம் தேவை என்பதால் சிறுதானியத்திற்கு மாற சொல்கிறார்கள். ஆனால், விவசாயிகள் மாறுவதில்லை. அந்த சிறுதானியத்தை அறுவடை செய்த பிறகு அதை வாங்குவதற்கு ஆள்கள் இருந்தால் மட்டுமே விவசாயிகள் சிறுதானிய சாகுபடிக்கு மாறுவார்கள். தமிழ்நாட்டில் இயற்கை விவசாய பொருள்களுக்கும், விவசாயிகளுக்கும் தனி பிராண்டு (Brand) வேண்டும். அப்போதுதான் விற்பனைக்கு ஒரு வழி கிடைக்கும். அரசு இதுபற்றி ஆலோசிக்க வேண்டும். இயற்கை விவசாயத்தில் விளையும் விளைபொருட்களின் விலையை மட்டுமே பார்க்கிறார்களே தவிர, மண்ணையும் விவசாயிகளைப் பற்றியும் துளியும் சிந்திக்க யாரும் இல்லை.

தமிழ்நாடு வேளாண் துறை புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம், ஒரு தனிப்பட்ட விவசாயி வைத்துள்ள நிலத்தின் விவரங்கள், மண்வளம், விளைச்சல், அவரின் ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றை தெரிந்து கொள்ள முடியும். ஆனால் அதை சரியான விதத்தில் உபயோகிக்க வேண்டும். அதற்கான அடுத்த கட்ட செயல்முறை நடந்து கொண்டிருக்கிறது.
மாடு இருந்தால் மட்டும் இயற்கை விவசாயம் என்பதில்லை, மாடு இல்லாமலும் இயற்கை விவசாயம் செய்ய முடியும். நாம் எந்த புத்தகத்தை படித்தாலும், எழுதியவர் என்ன கருத்தை எந்த நோக்கில் கூறியுள்ளார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்” என்று பேசினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், திராவிடப்பண்ணை வீ.தமிழ்மணி, கரிம வேளாண் கட்டமைப்பின் நிறுவனர் அரு.சோலையப்பன் மற்றும் கரிம வேளான் கூட்டமைப்பின் தலைவர் அரியனூர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.