புதுடெல்லி: குஜராத்தில் பிறந்த ஆன்மிகவாதி ஆயி ஸ்ரீ சோனல் மாதா, மக்கள் நலனுக்காக தன் வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்தவர் என அவரது 100 வது பிறந்தநாள் விழாவில் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
குஜராத் மாநிலத்தின் சரண் சமுதாயத்தைச் சேர்ந்த ஆன்மீக வாதி ஆயி ஸ்ரீ சோனல் மாதா. இவர் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள மாதாடா கிராமத்தில் கடந்த 1924-ம் ஆண்டு ஜனவரி மாதம் 8-ம் தேதி பிறந்தார். இவரது 100-வது பிறந்தின கொண்டாட்டத்தை சரண் சமாஜ் அமைப்பினர் ஜூனாகத் நகரில் 3 நாட்கள் கொண்டாடுகின்றனர். இந்த விழாவை முன்னிட்டு வீடியோ மூலம் பிரதமர் மோடி ஆற்றிய உரையில் கூறியதாவது:
ஆயி ஸ்ரீ சோனல் மாதாவின் நூறாவது பிறந்த தினம் பாஷ் என்ற புனித மாதத்தில் நடைபெறுகிறது. இந்த புனிதமான நிகழ்ச்சியில் நான் பங்கேற்பது எனதுபாக்கியம். ஸ்ரீ ஆயி சோனல் மாதாவின் காலடியில் வணங்கி எனது மரியாதையை செலுத்துகிறேன். சோனல் மாதாவின் ஆசி கிடைத்ததற்காக நான் நன்றி தெரிவிக்கிறேன்.
நாட்டுக்காவும், மக்களுக்காவும் சேவை செய்வதில் தனது வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்தவர் சோனல் மாதா. அவர் பகத் பாபு, வினோபா பாவே, ரவி சங்கர் மகராஜ் போன்ற மகான்களுடன் இணைந்து பணியாற்றினார். சரண் சமுதாயத்தினருக்கு மாதாடா தாம், மதிப்புமிக்க, சக்தி மிக்க மற்றும் பாரம்பரியமான மையமாக உள்ளது. எந்த காலத்திலும் அவதார ஆத்மாக்கள் இல்லாத நாடாக இந்தியா இருந்ததில்லை. குஜராத் மற்றும் சவுராஷ்டிரா பகுதி மிகச் சிறந்த மகான்கள் வாழ்ந்த பூமி.
இங்கு பல மகான்கள் ஒளி விளக்காக இருந்து மக்களுக்கு வழிகாட்டியுள்ளனர். சரண் சமுதாய அறிஞர்கள் இடையே சோனா மாதாவுக்கு எப்போது தனி இடம் உள்ளது. அவரது வழிகாட்டுதல் மூலம் பல இளைஞர்களின் வாழ்வில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கல்வி மற்றும் போதை ஒழிப்பில் அவர் ஆற்றிய மிகச் சிறந்த பணி பாராட்டுக்குரியது. மக்கள் கடுமையாக உழைத்து தற்சார்புடையவர்களாக திகழ அவர் வலியுறுத்தினார். கால்நடைகளை அவர் பாதுகாத்தார். சமூக பணி, ஆன்மீக பணியோடு, நாட்டு ஒற்றுமையின் வலுவான பாதுகாவலராகவும் அவர் இருந்தார். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.