''மணிப்பூரில் மீண்டும் இணக்கத்தை ஏற்படுத்துவோம்'' – இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை தொடக்க விழாவில் ராகுல் பேச்சு

இம்பால்: காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தியின் இரண்டவது பெரிய யாத்திரையான பாரத் ஜோடோ நியாய யாத்திரை இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்தின் தவ்பால் நகரின் கோங்ஜோமில் உள்ள போர் நினைவிடத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் தொடங்கியது.

இன்று தொடங்கும் இந்த யாத்திரை மொத்தம் 67 நாட்களில், 100 மக்களவைத் தொகுதிகள், 337 சட்டப்பேரவைத் தொகுதிகள், 110 மாவட்டங்கள் வழியாக 6,713 கி.மீ., தூரம் பயணித்து மார்ச் 20ல் மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் நிறைவடைகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான 3,000 கி.மீ. அதிகமான தூரத்தினை நடந்தே கடந்த ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையின் தொடர்ச்சியாக நடக்கும் இந்த பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் காங்கிரஸ் தலைவர் பேருந்து மூலமாகவும், சில இடங்களில் நடந்தும் கடப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாத்திரையின் தொடக்க நிகழ்வில் பேசிய ராகுல் காந்தி, “கடந்த 2004ம் ஆண்டில் இருந்து நான் அரசியலில் இருக்கிறேன், முதல் முறையாக இந்தியாவில் ஆட்சியின் முழு உள்கட்டமைப்பும் சரிந்த ஒரு இடத்துக்கு வந்திருக்கிறேன். ஜுன் 29க்கு பின்னர், மணிப்பூர், மணிப்பூராக இல்லை. அது பிளவு பட்டு, எங்கும் வெறுப்பு பரவியது. லட்சக்கணக்கான மக்கள் இழப்பினை சந்தித்துள்ளனர். மக்கள் அவர்களின் கண்ணெதிரிலேயே தங்களின் பிரியமானவர்களை இழந்தார்கள்.

ஆனால் இப்போது வரை பிரதமர் மோடி உங்களின் கண்ணீரைத் துடைத்து, கரங்களைப் பற்றிக்கொள்ள வரவில்லை. இது ஒரு வெட்கக்கேடான விஷயம். ஒருவேளை பிரதமர் மோடியும், ஆர்எஸ்எஸும் மணிப்பூரை இந்தியாவின் பகுதியாக நினைக்கவில்லையோ. மணிப்பூர் பாஜகவின் அரசியல் சின்னம், மணிப்பூர் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸின் வெறுப்பின் சின்னம், மணிப்பூர் பாஜகவின் கண்ணோட்டம் மற்றும் சித்தாந்தத்தின் சின்னம். நீங்கள் மதித்த அனைத்தையும் நீங்கள் இழந்து விட்டீர்கள். நீங்கள் மதித்த அனைத்தையும் நாங்கள் மீண்டும் உங்களுக்கு திருப்பித் தருவோம். மணிப்பூர் மக்களின் வலியினை நாங்கள் உணர்கிறோம். உங்களின் காயம், இழப்பு துயரத்தை நாங்கள் புரிந்து கொள்கிறோம். நீங்கள் மதிப்பு வைத்திருந்தவைகளை உங்களுக்கு நாங்கள் திருப்பி வழங்குவோம். நல்லிணக்கம், அமைதி, இந்த பிராந்தியத்தில் அறியப்பட்ட இணக்கம் ஆகியவைகளை நாங்கள் உங்களுக்கு திருப்பித் தருவோம் என்று உறுதி அளிக்கிறோம்” என்று பேசினார்.

யாத்திரையைத் தொடங்கி வைத்து பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “ராகுல் காந்தி முதலில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டார். தனது யாத்திரையின் போது அவர், எளிய மக்கள், பெண்கள், குழந்தைகள், பத்திரிகையாளர்கள், சிறு தொழில்முனைவோர்களைச் சந்தித்தார். இன்று மீண்டும் அவர் மணிப்பூரில் இருந்து மும்பை வரை பாரத் ஜோடோ நியாய யாத்திரையைத் தொடங்கி இருக்கிறார். அதனால் அனைவரும் அவருடன் நின்று அவரை வலுப்படுத்துவீர்கள் என்று நான் நம்புகிறேன்” என்று பேசினார்.

முன்னதாக பாரத் ஜோடோ யாத்திரை 2.0-வை மணிப்பூர் தலைநகர் இம்பாலின் அரண்மனை மைதனானத்தில் இருந்து தொடங்கவே காங்கிரஸ் கட்சித் திட்டமிட்டிருந்தது. ஆனால் மாநிலத்தில் ஆளும் பிரேன் சிங் அரசு சில நிபந்தனைகள் விதித்தால் யாத்திரையின் தொடக்கம் தவ்பாலின் தனியார் மைதானக்குக்கு மாற்றப்பட்டது. யாத்திரைக்கு தவ்பாலின் இணை ஆணையர் வழங்கியிருக்கும் அனுமதி உத்தரவின் படி, யாத்திரை தொடக்க விழா ஒருமணிநேரத்துக்கு மேல் நீடிக்கக்கூடாது. விழாவில் 3000 பேருக்கு அதிகமானவர்கள் கலந்து கொள்ளக்கூடாது. யாத்திரையில் தேசத்துக்கு விரோதமான, கலவரத்தை தூண்டும் வகையிலான முழக்கங்களை எழுப்பக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. மாநில அரசு அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு ஏற்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.