திண்டுக்கல் மாவட்டத்தில் நாட்டுச் சேவல்கள் அழியாமல் காப்பதற்காக ஆண்டுதோறும் சேவல் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டிற்கான கண்காட்சியில் 400 சேவல்கள் காட்சி நிறுத்தப்பட்டன.

திண்டுக்கல் அருகே குட்டியபட்டியில் நடந்த சேவல் கண்காட்சியில் மதுரை, திண்டுக்கல், கோவை, திருச்சி, சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நடாகாவில் இருந்தும் சேவல்கள் கண்காட்சிக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.
இந்த கண்காட்சியில் ஆண்கள் மட்டுமில்லாது சேவல் வளர்ப்பில் உள்ள பெண்களும் தங்களின் சேவல்களுடன் கண்காட்சியில் கலந்து கொண்டனர். அதேபேல சேவல் வளர்ப்பில் ஆர்வமுள்ள தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும் கண்காட்சியை காண வந்திருந்தனர்.

இதில் விசிறிவால், கிளிமூக்கு சேவல், மயில், காகம், கீரி, நூலான், வெள்ளை, செங்கீரி, பூதி, கரடு, பொன்ராம், கரடுபொன்ராம் உள்ளிட்ட 15 வகையான சேவல்கள் காட்சி படுத்தப்பட்டன. விதவிதமாக அணிவந்து நிறுத்தப்பட்டிருந்த சேவல்களை, சேவல் வளர்ப்போர் மட்டுமில்லாது பொதுமக்களும் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.
இந்த கண்காட்சியின் போது சேவல்கள் விற்பனையும் நடந்தது. சேவல்களின் முகசுத்தம், கால் சுத்தம் கொண்டை அழகு, முடியின் நீளம், கூர்மையான பார்வை, உயரம், நீளம் மற்றும் எடை அளவு வைத்து முதல் ரவுண்டில் தேர்வு செய்யப்பட்ட 100 சேவல்களில் 30 சிறந்த சேவல்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதுகுறித்து சேவல் கண்காட்சியை ஒருங்கிணைத்த நெல்சனிடம் பேசினோம். ”சேவல் ஆர்வலர்கள் தங்களுக்கு பிடித்தமான சேவல்களை மாடுகளை மாட்டுச் சந்தையில் விலை பேசி வாங்குவது போல உரிமையாளர்களிடம் பேசி வாங்கி சென்றனர். இதில் விசிறிவால், கிளிமூக்கு சேவல்கள் ஒரு லட்ச ரூபாய் வரை விலை போனது. கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவரின் சேவல் அதிகபட்சமாக 3 லட்ச ரூபாய்க்கு விலை போனது. இதில் 30 சிறந்த சேவல்கள் தேர்வு செய்யப்பட்டு உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் 50 லட்ச ரூபாய்க்கு விற்பனையும் நடந்துள்ளது. இந்த மாநாட்டில் சேவல் வளர்ப்பு குறித்தும், நோய் தாக்குதல்களில் இருந்து காப்பது குறித்தும் கால்நடை மருத்துவர்கள் ஆலோசனைகளை வழங்கினர்” என்றார்.