மாலத்தீவில் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட முகமது முய்ஸு, தான் அதிபரானவுடன் இந்தியாவுடான உறவை மறு ஆய்வு செய்துள்ளார். அதோடு தங்களது நாட்டில் இருந்து இந்திய ராணுவம் வெளியேறவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் சீனாவுடன் உறவை மேம்படுத்தப் போவதாக குறிப்பிட்டு இருந்தார். `இந்திய ராணுவத்தை நாட்டில் இருந்து வெளியேற்றுவேன்’ என்று பிரசாரம் செய்தே தேர்தலில் வெற்றி பெற்றார். சொன்னதுபோல் தேர்தலில் வெற்றி பெற்றவுடன், `அந்நிய படைகள் மாலத்தீவில் இருக்கக் கூடாது’ என்று அவர் குறிப்பிட்டு இருந்தார். இதனால் இந்தியா மற்றும் மாலத்தீவு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. மாலத்தீவு மக்கள் உணவு போன்ற பெரும்பாலான தேவைகளுக்கு இந்தியாவையே நம்பி இருக்கின்றனர்.

அதே சமயம் பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவிற்கு சென்று அங்குள்ள சுற்றுலா பகுதிகள் குறித்து சுட்டிக்காட்டி இருந்தார். பிரதமரின் இச்செயலை மாலத்தீவு பெண் அமைச்சர் உட்பட 3 அமைச்சர்கள் கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர். இதையடுத்து 3 அமைச்சர்களும் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர். அதையடுத்து மாலத்தீவு அதிபர், சீனாவிற்கு சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டு அதிபரைச் சந்தித்துப் பேசினார். மாலத்தீவில் இருக்கும் இந்திய ராணுவத்தைத் திரும்ப பெற இரு நாடுகளும் உயர்மட்டக்குழு ஒன்றை அமைத்திருந்தன. இதன் முதல் கூட்டம் மாலத்தீவில் உள்ள மாலே நகரத்தில் இருக்கும் வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகத்தில் நடந்தது. இதில் இந்திய ராணுவத்தை வரும் மார்ச் 15-ம் தேதிக்குள் திரும்பப் பெற்றுக்கொள்ளும்படி இந்திய தூதர் மகேஷ்வரிடம் மாலத்தீவு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இச்செய்தியை இந்தியா உறுதிபடுத்தவில்லை. ஆனால் கடந்த நவம்பர் மாதம் மத்திய அமைச்சர் கிரண், மாலத்தீவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போதைய அதிபரைச் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது மாலத்தீவில் இந்திய ராணுவம் தொடர்ந்து இருக்க இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் தீர்வு ஒன்றை எட்ட மாலத்தீவு அதிபர் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. மாலத்தீவு இந்திய பெருங்கடலில் சிறிய நாடாக இருந்தாலும், இந்தியாவின் வடக்கு மற்றும் தெற்கு இடையே கப்பல்கள் சென்று வருவதில்முக்கிய பங்கு வகிக்கிறது. எனவேதான் இந்திய போர்க்கப்பல்கள் தொடர்ந்து இப்பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளது. இந்திய போர் விமானங்கள்தான் கண்காணிப்பு பணியை மேற்கொள்கிறது.

இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்களும் மாலத்தீவில் இருக்கிறது. இந்திய ராணுவ வீரர்கள் 88 பேர் மட்டுமே மாலத்தீவில் இருக்கின்றனர். அவர்கள் மாலத்தீவில் மனிதாபிமான பணிகள், பேரிடர் மீட்பு பணிகள் மற்றும் சட்டவிரோத கடல் நடமாட்டத்தை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
2013-ம் ஆண்டே அப்போது மாலத்தீவு அதிபராக இருந்த அப்துல்லா யாமீன், முதன்முறையாக இந்தியாவை மாலத்தீவில் இருந்து அகற்றிவிட்டு, சீனாவுடன் உறவை நெருக்கமாக்குவது என்ற முடிவை எடுத்தார். ஆனால் அதன் பிறகு வந்த அதிபர் இப்ராகிம், இந்தியாவுடன் சுமுகமான உறவை பேணினார். அப்துல்லாவிற்கு கிரிமினல் வழக்கில் 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால், அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது. அப்துல்லாதான் தனது சார்பாக முகமது முய்ஸுவை அதிபருக்கான வேட்பாளராக நியமித்தார். எனவேதான் அப்துல்லாவின் கொள்கையை முய்ஸு இப்போது அமல்படுத்த முயற்சிக்கிறார்.

இந்திய பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்தவேண்டும் என்று கருதி, மாலத்தீவில் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள சீனா முயற்சி மேற்கொள்கிறது. மற்றொரு புறம் சீனா மாலத்தீவிற்கு கடன் கொடுத்து, அதனை தனது அடிமையாக்கிவிடும் என்று மாலத்தீவு மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மாலத்தீவிற்கு இந்தியாவில் இருந்து அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் செல்வது வழக்கம். இரு நாடுகளிடையே பிரச்னை ஏற்பட்டிருப்பதால், இந்தியாவில் இருந்து மாலத்தீவு செல்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.