கந்தகாடு முகாம் கைதிகள் தப்பியோடியமை தொடர்பாக ஆராய்வதற்கு ஐவர் அடங்கிய சபை நியமனம்

கந்தகாடு புனரமைப்பு முகாமில் தங்கியிருந்த கைதிகள் சிலர் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பாக நீதிமன்ற, சிறைச்சாலைகள், மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமாகிய பேராசிரியர் விஜேதாச ராஜபக்ஷ் வினால் ஐந்து நபர்களை உள்ளடக்கியதாக விசாரணைச் சபை நியமிக்கப்பட்டுள்ளது.

அச்சபையின் தலைவராக உயர் நீதிமன்ற நீதவான் ஹெக்டர் யாப்பா நியமிக்கப்பட்டுள்ளதுடன், அதனுடன் தொடர்புடைய விசாரணை மற்றும் சிபாரிசுகளை உள்ளடக்கிய அறிக்கை மூன்று வாரங்களுக்குள் தனக்கு சமர்ப்பிக்குமாறு அமைச்சர் சம்பந்தப்பட்ட விசாரணைச் சபைக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

நீதி அமைச்சரினால் நியமிக்கப்பட்டுள்ள இவ்விசாரணைச் சபைக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் (நிருவாகம் மற்றும் பொலிஸ்) எம். எஸ். பி. சூரியப்பெரும, நீதிமன்ற சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சின் செயலாளர் (நீதி), ஆர். எஸ். ஹபுகஸ்வத்த மற்றும் நீதிப் பிரிவின் செயலாளர் பியுமந்தி பீரிஸ், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் டி. எம். சமன் திசாநாயக்க ஆகியோர் ஏனைய அங்கத்தவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.