உறைபனியில் உறைந்த உதகை: வெப்பநிலை மைனஸில் செல்லவும் வாய்ப்புள்ளதாக கணிப்பு

உதகை: நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக உறைபனி தாமதமாகத் தொடங்கினாலும், பனியின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. உறைபனியில் உதகை உறைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் வழக்கமாக நவம்பர் மாத தொடக்கத்தில் உறைபனி தொடங்கி, மார்ச் முதல் வாரம் வரை நீடிக்கும். கடந்தாண்டு அதிக அளவு மழை நாட்களைக் கொண்டிருந்ததால் மழை மற்றும் மேகமூட்டம் காரணமாக உறைபனி தள்ளிப்போனது. நவம்பர் மாத இறுதி அல்லது டிசம்பர் மாத தொடக்கத்தில் உறைபனிப் பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பனி பொழிவு இல்லை.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் உறைபனியின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தொடங்கிய முதல் நாளே வெப்பநிலை 4.3 டிகிரி செல்சியஸாக பதிவானது. தலைகுந்தா, அவலாஞ்சி, முக்கூர்த்தி, கேத்தி பள்ளத்தாக்கு உட்பட்ட பகுதிகளில் வெப்பநிலை பூஜ்ஜியத்தையும் எட்டியது.

இன்று அதிகாலை வெப்பநிலை கடுமையாக குறைந்தது. உதகை தாவரவியல் பூங்கா மற்றும் சுற்று வட்டாரப்பகுதகளில் வெப்பநிலை 2.8 ஆக பதிவானது. உதகை குதிரை பந்தய மைதானம், அரசு தாவரவியல் பூங்கா, தலைகுந்தா, கேத்தி, லவ்டேல் ஆகிய பகுதிகளில் கடுமையான உறைபனி நிலவியது. புல்வெளிகள் அனைத்தும் உறைபனியால் வெள்ளிக்கம்பளம் விரித்தாற்போல் காட்சியளித்தன.

தேயிலைச் செடிகள், மலைக் காய்கறி பயிர்கள், தாவரங்கள் என அனைத்தும் வெண் முத்துக்களாகவும் காட்சியளிக்கின்றன. இந்த ஆண்டு உறைபனி தாமதமாக தொடங்கினாலும் அதன் தாக்கம் அதிகமாக இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

மக்கள் கூறுகையில், ‘இந்த ஆண்டு உறைபனியின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. இரவிலும் அதிகாலையிலும் கடுமையான குளிர் வாட்டுகிறது. இந்த உறைபனியின் தாக்கத்தால் தேயிலை மற்றும் பல்வேறு பயிர்களும் கருகி வருகின்றன. தாவரங்கள் மற்றும் புல்வெளிகளும் தொடர்ந்து கருகி வருவதால் வனங்களில் பசுமை குறைந்து வனவிலங்குகள் இடம் பெயரவும் வாய்ப்புள்ளது” என்றனர்.

உறைபனி குறித்து இந்திய மண் மற்றும் நீர்வளப்பாதுகாப்பு நிறுவன அதிகாரிகள், “கடல் மட்டத்திலிருந்து 2,000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள தொட்டபெட்டா சிகரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உறைபனியின் தாக்கம் அதிகம் காணப்படும். கூடலூர், பந்தலூர் பகுதிகளில் பனியின் தாக்கம் குறைந்து காணப்பட்டாலும், மலை மேலிட பகுதிகளான உதகை, குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் இந்த ஆண்டு கடுமையான உறைபனி நிலவும் வாய்ப்புகள் உள்ளன. வானம் மேக மூட்டம் இன்றி தொடர்ந்து காணப்பட்டால் வெப்பநிலை மைனஸில் செல்லவும் வாய்ப்பு உள்ளது” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.