‘வரும் மாதங்களிலும் பணிநீக்க நடவடிக்கை’ – ஊழியர்களுக்கு கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை எச்சரிக்கை 

புதுடெல்லி: சமீபத்திய பணிநீக்க நடவடிக்கையைத் தொடர்ந்து, நிறுவனத்தின் நடவடிக்கைகளை எளிமையாக்கும் வகையில் வரும் மாதங்களில் மேலும் பணிநீக்க நடவடிக்கைகள் இருக்கும் என்று கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கூறியிருப்பதாக ‘தி வெர்ஜ்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சுந்தர் பிச்சை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், “இந்த பணிநீக்க நடவடிக்கைகள் நிறுவனத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும் வகையில் பல்வேறு துறைகளின் அடுக்குகளை நீக்குவதாக இருக்கும். இந்த பணி நீக்கம் கடந்த ஆண்டின் அளவில் இருக்காது. அதேபோல் எல்லா குழுக்களிலும் இரு்ககாது” என்று தெரிவித்துள்ளார். கூகுள் அசிஸ்டண்ட் பிரிவில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்பட்ட சில நாட்களுக்குள் இந்த அறிவிப்பு வந்துள்ளது. இந்த பணிநீக்க நடவடிக்கையில் கூகுள் நெஸ்ட், பிக்ஸல், ஃபிட்பிட், விளம்பர விற்பனை பிரிவு போன்றவை அதிகமாக பாதிக்கப்பட்டன.

முன்னதாக, 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கூகுள் நிறுவனம் சர்வதேச அளவில் உள்ள தனது ஊழியர்களில் 12,000 பேர் அல்லது 6 சதவீதம் பேரை பணி நீக்கம் செய்யப்போவதாக அறிவித்தது. 2023 செப்டம்பரில் உலக அளவில் அந்நிறுவனத்தில் 1,82,381 பேர் இருந்தனர். கூகுள் வரலாற்றிலேயே இந்த பணிநீக்க நடவடிக்கை மிகப்பெரியது என்றாலும் நிறுனத்துக்கு இது மிகவும் இன்றியமையாதது என்று சுந்தர் பிச்சை முன்பு தெரிவித்திருந்தார்.

நிறுவனத்தின் ஊழியர்களின் கட்டமைப்பை மறுசீரமைப்பு செய்யும் நடவடிக்கையாக இந்த பணிநீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நடவடிக்கையின் போது ஃபிட்பிட் இணை நிறுவனர்களான ஜேம்ஸ் பார்க் மற்றும் எரிக் ஃப்ரைட்மானும் நீக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

7,500 ஊழியர்கள் நீக்கம்: அமெரிக்காவும் ஐரோப்பாவும் பொருளாதாரத்தில் மறுமலர்ச்சி என்ற நம்பிக்கையுடன் இந்த புத்தாண்டை தொடங்கியுள்ள நிலையில், பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் செயற்கைநுண்ணறிவு தொழில்நுட்பத்தின் முதலீடு செய்வதன் தொடர்ச்சியாக ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையுடன் தொடங்கியுள்ளன.

கூகுள் மற்றும் அமேசான் போன்ற மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்தன. மேலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் முன்னேற்றம் காரணமாக அடுத்த சில மாதங்களில் மேலும் பணிநீக்கம் இருக்கும் என்று அறிவித்துள்ளன. Layoffs.fyi. இணையதளத்தின் படி இந்தத் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஜனவரி மாதத்தில் இதுவரை 7,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

அமேசான் நிறுவனம் அதற்குச் சொந்தமான பிரைம் வீடியோ மற்றும் எம்ஜிஎம் ஸ்டுடியோ பிரிவு ஊழியர்கள் நூற்றுக்கணக்கானவர்களை பணிநீக்கம் செய்தது. அதேபோல், அமேசானுக்குச் சொந்தமான லைவ்ஸ்ட்ரீமிங் தளமான Twitch ஊழியர்கள் 500 பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

செயற்கைநுண்ணறிவு தொழில்நுட்ப போட்டியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் நேரடியாக மோதும் வகையில், கூகுள் மற்றும் அமேசான் நிறுவனங்கள் செயற்கைநுண்ணறிவு தொழில்நுட்பத்தில் பில்லியன்களை முதலீடு செய்து வருகின்றன. இந்தப் பின்னணியில் ஊழியர்களின் கட்டமைப்பை மறுசீரமைக்கும் நடவடிக்கையாக இந்த பணிநீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.