Ameer: "ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு அரசுப்பணி வழங்க வேண்டும்" -இயக்குநர் அமீர் கோரிக்கை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் ஜல்லிகட்டு போட்டிகள் நடைபெற்றது.

போட்டிகளில் கலந்துகொண்டு காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் முதல் இடம் பிடித்தவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.  பரிசு வென்ற வீரர்கள், தங்களுக்கு கார் பரிசளிப்பதை விட அரசு வேலை கொடுக்கலாம் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தனர்.

ஜல்லிகட்டு போட்டி

இந்நிலையில் இயக்குநரும், நடிகருமான அமீர் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் வெற்றிபெறும் வீரர்கள், அரசுப் பணி வழங்க வேண்டும் என்று முன்வைக்கும் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு அறிக்கை வாயிலாகக் கோரிக்கை வைத்திருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும்  பதிவில், “ “திக்கெட்டும் திகழ் ஒளி வீசி தமிழகத்தின் பெருமையை உலகறியச் செய்து வரும் தாங்கள், தமிழின் தலைநகராம் மதுரையில் ஜல்லிகட்டுகளுக்கென  சிறப்பாக, “கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்” என்ற மைதானம் ஒன்றை தங்கள் திருக்கரங்களில் திறக்கவிருக்கும் இவ்வேளையில்,

“தொழுவினுள் புரிபு புரிபு புக்க பொதுவரைத்
தெரிபு தெரிபு குத்தின ஏறு..
கொல்லேற்றுக் கோடஞ்சு வானை, மறுமையும்
புல்லாளே ஆய மகள்..”

அமீர்

என்று கலித்தொகை பறைசாற்றும் பாரம்பரியமும், வீரமும் ஒருங்கே அமையப் பெற்று, ஒன்றிய அரசிடமும், உச்சநீதிமன்றத்திடமும் போராடிப் பெற்ற நமது கலாசார வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை, தமிழக அரசின் அரசுப்பணி இடஒதுக்கீட்டில் விளையாட்டு உட்பிரிவில் சேர்த்து மேலும் பெருமை சேர்க்க கோருகிறேன்.

மேலும், மதுரை அலங்காநல்லூரிலும், அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஆகிய இடங்களில் நடந்த நிகழ்வுகளிளும் வெற்றி பெற்ற வீரர்கள் அரசுப்பணி கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். இந்த இனிய தருணத்தில் அவர்களது கோரிக்கையை தாங்கள் கனிவோடு கவனித்து ஆவன செய்யக் கேட்டுக் கொள்கிறேன்.

“தமிழர் வீரம் வீணாகாது – தமிழ்க்கூட்டம் கூடிக்கலையும் கூட்டமல்ல.!” என்பதை உலகிற்கு சொல்லும் செய்தியாக இது அமைவதோடு, தமிழர் தம் நெடிய வரலாற்றில் தங்களது இச்செயல் பொன்னெழுத்தில் பொறிக்கப்பட்டு வரலாற்றில் வைக்கப்படும் என்ற நம்பிக்கையோடு இக்கோரிக்கையை முன்வைக்கிறேன்” என்று அதில் குறிபிட்டிருக்கிறார்.  அமீரின் இந்த கோரிக்கை குறித்து உங்கள் கருத்தை கமென்ட்டில் பதிவிடுங்கள்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.