இரவு பகல் பார்க்காமல் ரீல்ஸ் பார்ப்பவரா நீங்கள்… உங்களுக்கு விடிவு காலம் பிறக்கப்போகுது!

Instagram New Sleep Reminder: வீட்டில் எப்போதும் டீவி பார்த்துக்கொண்டே இருக்கிறாய் என சிறுவயதில் பலரும் பெற்றோரிடம் திட்டு வாங்கியிருப்பீர்கள். அது நாளடைவில், எப்போது பார்த்தாலும் மொபைலையே நோண்டிக்கொண்டிருக்கிறாய் என பரிணாமம் பெற்றுவிட்டது எனலாம். ஆனால், இளைஞர்கள், பதின்ம வயதினர் என்றில்லை 50 வயதுக்கு மேற்பட்டோரும் கூட சமூக வலைதளம் போன்ற மொபைல் பயன்பாட்டை அதிகமாக்கி உள்ளனர்.

தூக்கம் முக்கியம்  

அந்த வகையில், இன்ஸ்டாகிராம் செயலி பேஸ்புக், X, வாட்ஸ்அப் போல் இன்றி இன்ஸ்டாகிராமை பெரும்பாலும் பதின்ம வயதினர்தான் பயன்படுத்துகின்றனர். முன்பு இன்ஸ்டாகிராம் முழுவதும் புகைப்படங்களின் ராஜ்ஜியம் என்றால் கடந்த சில ஆண்டுகளாக ரீல்ஸ்களின் ராஜ்ஜியம் நடைபெற்று வருகிறது. இன்ஸ்டா பக்கத்தை திறந்தாலே பிரபலங்களில் இருந்து பக்கத்து வீட்டு பையன் வரை அனைவரும் விதவிதமாக அழகழகாக ரீல்ஸ் செய்து அதை பதிவேற்றுகின்றனர். 

சிலருக்கு இதுபோன்ற ரீல்ஸ்களை பதிவேற்றுவது பிடிக்கும் என்றால் பல பேருக்கு அதனை ஸ்க்ரோல் செய்து பார்த்துக்கொண்டே இருப்பது பிடிக்கும். ஒரு ரீல்ஸ் நன்றாக இருக்கிறதே என பார்க்க ஆரம்பித்தால் கையும், கண்ணும் சோர்வடையும் வரை ஸ்க்ரோல் செய்து செய்து ரீல்ஸ்கள் சென்றுகொண்டே இருக்கும். ஏற்கெனவே, பார்த்த ரீல்ஸ் வந்தால் கூட அதனை பார்ப்பது, மற்றவர்களுக்கு பகிர்வது என நேரம் போவதே தெரியாது. 

புதிய அம்சம் அறிமுகம் 

அந்த வகையில், இன்ஸ்டாகிராம் அதன் செயலியில், பதின்ம வயதினரின் உடல்நலனை கருத்தில்கொண்டு ஒரு புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளது. ரீல்ஸை தொடர்ந்து பார்த்துக்கொண்ட வந்தால், ஒருகட்டத்தில் அந்த செயலியே, ரீல்ஸ் பார்ப்பதை நிறுத்திவிட்டு ஓய்வு எடுக்க அல்லது தூங்கச் செல்லுமாறு பயனர்களுக்கு நினைவூட்டுகிறது.

பயனர்கள் செயலியை விட்டு வெளியேறவும், செயலியை நோக்கி தூண்டப்படாமல் இருக்கவும் இது அதன் மற்றொரு அம்சமாகும். இன்ஸ்டாகிராம் சில காலத்திற்கு முன்பு Quiet Mode அம்சத்தை கொண்டுவந்தது. இது இரவில் நல்ல தூக்கத்திற்காக பயனர்களுக்கு செய்திகளையும், நோட்டிபிக்கேஷனையும் அனுப்பாது. இப்போது, இந்த பதின்ம வயதினரை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த புதிய அம்சம், உறக்கத்திற்கு முன்னுரிமை அளிக்க உதவும் மற்றொரு கூடுதல் அம்சமாக திகழ்கிறது.

நேரமாகிவிட்டது என்பது நினைவூட்டும்

பதின்ம வயதினருக்கான மெட்டா வலைப்பதிவில்,”இளைஞர்கள் மற்றும் பெற்றோருக்கு எங்கள் செயலிகளின் நேரத்தை நிர்வகிப்பதற்கான கூடுதல் வழிகளை வழங்குதல்” என்ற தலைப்பில், இந்த அம்சம் பதின்ம வயதினரை இரவில் செயலியை மூட நினைவூட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளது. பதின்வயதினர் ரீல்களை ஸ்க்ரோல் செய்யும் போது அல்லது நேரடிச் செய்தியில் 10 நிமிடங்களுக்கு மேல் இரவில் நீண்ட நேரம் இருக்கும்போது, இந்த புதிய அம்சம் அவர்களுக்கு ‘நேரமாகிவிட்டது’ என்பதை நினைவூட்டும்” என குறிப்பிட்டுள்ளது.

மேலும்,”குறிப்பாக இளைஞர்களுக்குத் தூக்கம் முக்கியமானது, எனவே, இரவில் நீண்ட நேரம் பதின்ம் வயதினர் இன்ஸ்டாகிராமில் 10 நிமிடங்களுக்கு மேல் செலவழித்தால், ரீல்ஸ் அல்லது Direct Messages போன்ற இடங்களில் காட்டப்படும் புதிய இரவுநேர நட்ஜ்களை நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம். அந்த அம்சம் பதின்ம வயதினருக்கு நேரமாகிவிட்டதை நினைவூட்டும். மேலும் செயலியை மூடவும் அந்த அம்சம் ஊக்குவிக்கும்” என மெட்டா குறிப்பிட்டுள்ளது.

இந்த அம்சம், செயலிக்கான தினசரி நேர வரம்பை அமைக்காத பதின்ம வயதினரை இலக்காகக் கொண்டது எனலாம். மேலும் சுவாரஸ்யமாக, அந்த அம்சம் ஆப்ஷனல் என்றாலும், பயனர்கள் இரவுநேர நட்ஜ்களை அணைக்க முடியாது. இரவு வெகுநேரமாகிறது என்று அது அவர்களை எச்சரிக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட பதின்ம வயதினருக்கு மட்டுமா அல்லது 18 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் இந்த இரவுநேர நட்ஜ்களை அனுப்ப மெட்டா திட்டமிட்டுள்ளதா என்பது குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.