திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே பாச்சாங்காட்டுபாளையம் பகுதியைச் சேர்ந்த பனியன் கம்பெனி தொழிலாளி ராமன். இவரது மனைவி சைலா. இத்தம்பதிக்கு சாய்சரண் என்ற 6 வயது மகன் உள்ளார். பெத்தாம்பாளையம் பகுதியில் தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்த சாய்சரண் பள்ளி வேனில் சென்று வருவது வழக்கம்.
பொங்கல் விடுமுறையைத் தொடர்ந்து, வியாழக்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், சாய்சரண் காலையில் பள்ளி வேனில் சென்றுவிட்டு மாலையில் அதே வேனில் வீட்டுக்கு திரும்பி உள்ளார். பாச்சாங்காட்டுபாளையம் பகுதியில் பள்ளி வேனில் இருந்து இறங்கிய சிறுவன் வீட்டை நோக்கி சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, பள்ளி வாகனத்தை ஓடிவந்த ஓட்டுநர் மணி, சிறுவன் சாய்சரண் நடந்து செல்வதைக் கவனிக்காமல் வாகனத்தை திருப்பி உள்ளார். இதில், பள்ளி வாகனத்தில் பின் பக்கத்தில் சிறுவன் சாய்சரண் சிக்கியுள்ளார், இது தெரியாமல் ஓட்டுநர் மணி வேனை தொடர்ந்து இயக்கியதால் அதில் சிக்கி சாய்சரண் படுகாயம் அடைந்துள்ளார்.
சாய்சரணின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஓடிவந்து அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சாய்சரணை பரிசோதித்த மருத்ததுவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக பல்லடம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான ஓட்டுநர் மணியையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து சாய்சரணின் வீட்டு அருகே வசிப்பவர்கள் கூறுகையில், “பள்ளி வேனில் இருந்து இறங்கி வீட்டை நோக்கி சிறுவன் சாய்சரணையும், மற்றொரு குழந்தையும் வேன் ஓட்டுநர் இறக்கி விட்டார். சாய்சரண் வீடு சற்று தொலைவில் இருப்பதால் அவர் வீட்டை நோக்கி நடந்து சென்றார்.
குழந்தைகளை இறக்கிவிட்டவுடன் வேனை ஓட்டுநர் வேகமாக இயக்கிதால், வேனின் பின் பகுதியில் சிக்கி சாய்சரண் படுகாயம் அடைந்தார். நாங்கள் சத்தம் போட்டும் வேனை நிறுத்தாமல் ஓட்டுநர் சென்றுவிட்டார். காலையில் உற்சாகமாக பள்ளிக்குப் போன சிறுவனை மாலையில் சடலமாகத்தான் பார்க்க முடிந்தது” என்றனர். பள்ளி வேன் மோதி சிறுவன் உயிரிழந்த சம்பவம் பல்லடம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.