`மாமன்னன்’ படத்திற்குப் பிறகு வடிவேலு அடுத்தடுத்து பல படங்கள் ஒப்புக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதில் அவருக்குக் கிடைத்த பெயருக்குப் பிறகு இன்னும் உஷாராகி விட்டார்.
கிட்டத்தட்ட எட்டு டைரக்டர்களிடம் கதை கேட்டிருக்கிறார். அவரை நாயகனாக வைத்துச் சொன்ன கௌதம் மேனனின் கதையைப் பற்றி இன்னும் வடிவேலுலால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. ‘இன்னும் ஒரு தடவை கேட்டுப் பார்க்கலாம்’ என்ற முடிவில் இருக்கிறார். மற்றும் நலன் குமாரசாமியும் அதே போலத்தான். கொரோனா காலத்தில் சொன்ன கதை. அதை தற்போது மறுபடியும் கேட்கப் போகிறார். இதற்கிடையில் ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் தயாரிப்பில் இதுவரை 97 படங்கள் தயாரிக்கப்பட்டு ரிலீஸ் ஆகியிருக்கின்றன. அவர்களின் நூறாவது தயாரிப்பில் விஜய்யை நடிக்க வைப்பதற்குத் துரிதமாக ரெடியாகி வருகிறார்கள்.

அதற்காக இரண்டு படங்களை விரைவாகவும், தரமாகவும் தயாரிக்க முடிவு செய்து இருக்கிறார்கள். அதில் ஒரு படத்தை
கே.எஸ்.ரவிக்குமாருக்கு ஒதுக்கித் தருவார்கள் என சூப்பர் குட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. 98வது படமாகத்தான் வடிவேலுவும் பகத் பாசிலும் நடிக்கிற படத்தையும் தயாரிக்கிறார்கள். வடிவேலுவின் பரம ரசிகர் என்பதால் பகத் உடனே எப்போது கேட்டாலும் நடித்துத் தருகிறேன் என்று சொல்லிவிட்டார். புதுமுக இயக்குநர் சுதீஷ் சங்கர் டைரக்ட் செய்கிறார்.
இன்னும் பெயர் சூட்டப்படாத இந்தப் படத்திற்காக மொத்தமாக 30 நாள்கள் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார் வடிவேலு. ‘பையா’ போல ரோடு டிராவலில் நடக்கிற கதை என்கிறார்கள். அந்தப் பயணத்தில் பகத்தும் வடிவேலும் இடம்பெறுவது மாதிரிதான் கதை. பயணத்தில் தொடங்கி அதிலேயே முடிகிற விதத்திலேயே அமைக்கப்பட்டு இருக்கிறது திரைக்கதை. தனக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாகத் தனித்தனியாக இருவரும் சந்தோஷப்பட்டுக் கொண்டதும் நடந்திருக்கிறது. வடிவேலுவிற்கு ‘புது வசந்தம்’ படத்தில் நடித்த சித்தாரா ஜோடியாக இடம்பெறக்கூடும் என்கிறார்கள்.

பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கி, தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தி முடித்து விடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். ‘எனக்குக் கொஞ்சம் ஒத்துழைப்பு தந்து முடித்துக் கொடுங்கள். எனது 98, 99, 100 படங்களில் உங்களுக்குப் பெரிய இடம் தருகிறேன்’ என்று சௌத்ரி வைகைப் புயலுக்கு உறுதி கொடுத்திருக்கிறாராம். இதனால் சந்தோஷத்தில் இருக்கிறார் வடிவேலு!