விஜயகாந்த் படத்துடன் `தமிழ் நடிகர்கள் பாதுகாப்பு அறக்கட்டளை' தொடங்கியது ஏன்? – நடிகர் பெஞ்சமின்

மறைந்த கேப்டன் விஜயகாந்தின் புகைப்படத்தோடு, தமிழ் நடிகர்கள் பாதுகாப்பு அறக்கட்டளை என்று ஒன்றை நிறுவியிருக்கிறார் நடிகர் பெஞ்சமின்.

நகைச்சுவை நடிகர் பெஞ்சமின், ‘திருப்பாச்சி’யில் குணச்சித்திர நடிப்பால் கவனம் ஈர்த்த பின், ‘திருப்பாச்சி’ பெஞ்சமின் என அழைக்கப்பட்டார். இயக்குநர்கள் சேரன், பேரரசு படங்களின் ஆஸ்தான நடிகர். இப்போது தமிழ் நடிகர்கள் பாதுகாப்பு அறக்கட்டளை என்று ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். `அதில் இயன்றதைச் செய்வோம்.. இல்லாதவர்க்கு’ என்று இருக்கிறது. விஜயகாந்த் ஓவியமும் அதில் இடம்பெற்றிருக்கிறது. இதுகுறித்து பெஞ்சமினிடம் பேசினேன்.

சமுத்திரகனியுடன் பெஞ்சமின்

”முதலில் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திவிடுகிறேன். இது நடிகர் சங்கத்திற்கு போட்டி சங்கம் என யாரும் நினைத்துவிட வேண்டாம். நலிந்த, வறுமையில் வாடும் நடிகர்களுக்கு உதவும் எண்ணத்தோடு இதை ஆரம்பித்திருக்கிறோம். நடிகர் சங்கத்தில் மூன்று முறை கமிட்டி மெம்பராக இருந்திருக்கிறேன். முன்னாடியெல்லாம் நலிந்த நடிகர்கள் இறந்துபோனால், நடிகர்கள் சங்கத்தில் உள்ள அத்தனை பேரும் திரண்டு போய், அஞ்சலி செலுத்துவார்கள். ஆனால் இப்போது பெரிய நடிகர்கள் இறந்தால் கூட, பலரும் செல்வதில்லை. இந்த நிலை வருத்தத்திற்குரியது. நலிந்த நடிகர்கள் இறந்து போனால் அவங்க யாரும் அனாதை பொணமாக போயிடக்கூடாது என்பதால், அவர்களை நல்லடக்கம் செய்யும் பொறுப்பை எங்களது அறக்கட்டளை பண்ணும் என்பதை சொல்லிக்கொள்கிறோம். ‘அனாதையாக யாரும் சாகக்கூடாது’ என்பதுடன், நலிந்த கலைஞர்களின் குழந்தைகளின் கல்விக்காகவும் நாங்க உதவுவோம். நடிகர்கள் மட்டும் என்பதல்ல, சினிமாவில் உள்ள அத்தனை கிராஃப்ட் களுக்கும் இந்த அறக்கட்டளை உதவக் காத்திருக்கு. அனுபரமி இந்த அறக்கட்டளையின் செயலாளராக இருக்கிறார்.

இப்படி ஒரு விஷயத்தை தொடங்கும் போது எம்.ஜி.ஆர், கேப்டன் இருவரது புகைப்படத்தோடு அறக்கட்டளையை அறிவிக்க நினைத்தோம். அதன்பின், நண்பர்கள் கேப்டன் நடிகர் சங்கத் தலைவராக இருந்திருக்கிறார். நடிகர் சங்க கடனை அடைத்தவர் நடிகர்களின் நலனுக்காக எத்தனையோ செய்திருக்கிறார் எனவே அவரே பொருத்தமாக இருக்கும் என விரும்பியதால், இப்போது கேப்டன் புகைப்படத்தைப் போட்டிருக்கிறோம்.

இந்த அறக்கட்டளையை நான் நிறுவினாலும், எனது நண்பர்கள் வட்டத்தினர் பொருளதவி செய்ய முன் வருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். நடிகர் சங்கம் கேப்டனுக்கு இரங்கல் கூட்டம் நடத்தும் இந்த தினத்தில், இப்படி ஒரு விஷயத்தை அறிவிக்கிறோம். ” என்கிறார் பெஞ்சமின்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.