அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘கேப்டன் மில்லர்’ நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.
இந்த பொங்கல் கொண்டாட்டங்களை எல்லாம் முடித்த கையோடு தனுஷ், தனது ‘D51’ படத்திற்குத் தயாராகிவிட்டார். இப்படத்தை தெலுங்கில் ‘Fidaa’, ‘Love Story’ படங்களை இயக்கிய சேகர் கமுலா இயக்குகிறார். பான் இந்தியா நடிகையாகக் கலக்கி வரும் ராஷ்மிகா, முதல்முறையாக இப்படத்தின் மூலம் தனுஷுடன் நடிக்கிறார். நாகார்ஜுனா இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கு ‘DNS’ என்று தற்போது டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனுஷுடன் நடிப்பது குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள ராஷ்மிகா, “தனுஷ் சார் ஒரு சிறந்த நடிகர். அவருடன் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை எனக்கு எப்போதும் இருக்கும். இதுபோன்ற சிறந்த நடிகர்களுடன் பணியாற்றும்போது அவர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம். நம் திறமையை மேலும் வளர்த்துக் கொள்ளலாம். அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ளப்போகிறேன். அதற்காக மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறேன். சேகர் சார் இதை இயக்குகிறார். அவர் என்னிடம் சொன்ன கதை, எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற எனது ஆர்வத்தைத் தூண்டியது. அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. அதற்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.