Cricket Latest News In Tamil: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட தொடர் (IND vs ENG Test Series) இந்தியாவின் வெவ்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. வரும் ஜன.25ஆம் தேதி தொடங்கும் இந்த தொடர் வரும் மார்ச் முதல் வாரம் வரை நீடிக்கிறது. இந்த தொடருக்கு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
கடந்தாண்டு அக்டோபர் – நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெற்ற ஓடிடி உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டி வரை சென்று கோப்பையை தவறவிட்டு அதிர்ச்சி அளித்தது. இதன் பின், இந்தாண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் (ICC T20 World Cup 2024) சாம்பியன் பட்டத்தை வெல்ல தயாராகி வந்தது. தற்போது, ஐபிஎல் மற்றும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன் இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி (ICC World Test Championship 2025) அடுத்தாண்டு ஜூன் மாதம்தான் நடைபெறுகிறது என்றாலும், கடந்த இரண்டு முறையும் இறுதிப்போட்டி வரை வந்து கோப்பையை தவறிவிட்டதால் டெஸ்ட் அணியிலும் இந்தியா கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், ரோஹித் சர்மா தலைமையில் அனைத்து துறைகளையும் சமநிலைப்படுத்தும் வகையில் 16 வீரர்கள் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், காயம் மற்றும் தவிர்க்க முடியாத காரணங்களை தவிர்தது இந்த மூன்று வீரர்களுக்கு வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாட வாய்ப்பு கிடைப்பது மிக மிக கடினம். அந்த வீரர்கள் குறித்தும் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காததற்கான காரணம் குறித்தும் இதில் காணலாம்.
துருவ் ஜூரேல்
இந்திய டெஸ்ட் அணிக்கு அறிவிக்கப்பட்ட புதுமுகம் துருவ் ஜூரேல் (Dhuruv Jurel). ஐபிஎல் மூலம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இவர் பரிட்சையப்பட்டவர் என்றாலும் டெஸ்ட் தொடரில் இவரின் ஆட்டத்தை காண பலரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் இந்தியா ஏ – தென்னாப்பிரிக்கா ஏ அணிகளுக்கு இடையிலான போட்டியில் இவரின் விக்கெட் கீப்பிங் திறனை கண்டு பிசிசிஐ இவரை தேர்வு செய்துள்ளது.
பண்டின் விபத்திற்கு பின் டெஸ்ட் அணியில் விக்கெட் கீப்பிங்கிற்கு பெரும் வெற்றிடம் நிலவியது. கேஎல் ராகுல் காயம் அதை இன்னும் கடினமாக்கியது. அந்த தருணத்தில் பிசிசிஐ அனுபவ வீரர் விருத்திமான சாஹாவுக்கு பதில் கேஎஸ் பரத்தை தேர்வு செய்தது. இருப்பினும், தற்போது கேஎல் ராகுல் அணிக்கு திரும்பியிருக்கிறார், கேஎல் பரத்தும் அணியில் இருக்கிறார். இஷான் கிஷன் இல்லாத நிலையில் ஜூரேலுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போது பிளேயிங் லெவனில் ராகுல் விக்கெட் கீப்பராக இறங்கும்பட்சத்தில் ஜூரேலுக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம். ஒருவேளை ராகுல் விக்கெட் கீப்பராக இல்லையென்றாலும், ஜூரேலுக்கு இந்தியா போகுமா என்பது கேள்விக்குறிதான்.
ஆவேஷ் கான்
இந்திய டெஸ்ட் அணியின் வேகப்பந்துவீச்சு முகமது ஷமி இல்லாததால் சற்று பலவீனமடைந்துள்ளது எனலாம். பழைய பந்தில் ரிவர்ஸ் செய்து எதிரணியை நிலைகுலைய செய்யும் திறன் ஷமி அளவிற்கு தற்போது யாருக்கும் இல்லை என்பதால் அவருக்கு மாற்று வீரரை அறிவிப்பது கடினம்தான். பிரசித் கிருஷ்ணா தென்னாப்பிரிக்காவில் கடுமையாக எதிரணி வீரர்களால் பந்தாடப்பட்டார். எனவே அவருக்கு இந்த தொடரில் வாய்ப்பே அளிக்கவில்லை. ஆனால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் முகேஷ் குமார் அருமையாக பந்துவீசினார்.
எனவே, இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா – சிராஜ் – முகேஷ் குமார் ஆகியோருக்குதான் வாய்ப்பிருக்கும் எனலாம். அதிகபட்சம் மூன்று வேகப்பந்துவீச்சுடன்தான் இந்தியா செல்லும் என்பதால் ஆவேஷ் கான் (Avesh Khan) விளையாடுவது சற்று கடினம்தான். நீண்ட தொடர் என்பதால் யாருக்காவது காயம் அல்லது தவிர்க்க முடியாத காரணத்தால் விலகல் ஆகிய சூழல்களில் வேண்டுமென்றால் ஆவேஷ் கானிற்கு வாய்ப்புள்ளது.
அக்சர் படேல், குல்தீப் யாதவ்
குல்தீப் யாதவ் (Kuldeep Yadav) வெள்ளை பந்து கிரிக்கெட்டில் அசைக்க முடியாத வீரராக திகழ்கிறார். கடந்த ஓடிஐ உலகக் கோப்பையில் இந்திய அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளராக இருந்தார். இருப்பினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் போன்ற வீரர் இருப்பதால் அவருக்கு மாற்றாக விளையாடுவது கடினம்தான். சுழலுக்கு சாதமான ஆடுகளத்தில் மூன்று சுழற்பந்துவீச்சாளர்களுடன் இந்தியா செல்லும்பட்சத்தில் வேண்டுமானால் குல்தீப்பிற்கு வாய்ப்பு கிடைக்கலாம்.
அதேபோல்தான் அக்சர் படேலும் (Axar Patel) ஜடேஜா இருப்பதால் இவருக்கு வாய்ப்பு கிடைப்பதும் அரிதுதான். குல்தீப்பிற்கு கூறியது போல் மூன்று சுழற்பந்துவீச்சாளர்கள் தேவைப்பட்டால் மட்டுமே இந்திய அணி இவர்களுக்கு போகும். இருப்பினும், அதிலும் இவர்களில் ஒருவருக்கே வாய்ப்பு கிடைக்கும் எனலாம்.