மதுரை: “திமுக அரசு தமிழகத்தில் நில ஒருங்கிணைப்பு சட்டம் கொண்டு வந்து விவசாயிகளை அழிக்க நினைக்கிறது. இச்சட்டத்தை திரும்பப் பெறக் கோரி ஜன.29-ல் மாநிலம் தழுவிய அளவில் திருச்சியில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும்” என பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய விவசாயிகள் சங்கம் தமிழ்நாடு கிளையின் தென்மண்டல கூட்டம் மதுரையில் இன்று நடைபெற்றது. மதுரை மண்டல செயலாளர் உறங்காபுலி தலைமை வகித்தார். எம்பி.ராமன், மதுரைவீரன், சங்க வழக்கறிஞர் அணி தலைவரும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான தேனி மனோஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில இளைஞர் அணி தலைவர் மேலூர் அருண் வரவேற்றார் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புகுழு தலைவரும், மாநில ஐக்கிய விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளருளான பி.ஆர்.பாண்டியன் பங்கேற்று பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு நில ஒருங்கிணைப்பு சட்டம் கொண்டு வந்து விவசாயிகளை அழிக்கப் பார்க்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விளைநிலங்களை கொடுக்க மறுக்கும் விவசாயிகளை குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கிறது. பயிர்க் காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் பேரில் தமிழக அரசும் காப்பீடு நிறுவனமும் கூட்டு சேர்ந்து ஊழல் முறைகேட்டில் ஈடுபடுவதை கண்டிக்கிறோம்.
பேரழிவு பெருமழையால் அழிந்து போன விவசாயிகளுக்கு பேரிடர் திட்டத்தில் உரிய இழப்பீடு வழங்காமல் துரோகம் இழைக்கிறது. நெல், கரும்புக்கு உரிய விலை கொடுக்க மறுக்கிறது. எனவே உடன் நெல் குவிண்டால் 1-க்கு ரூ.3500, கரும்பு டன் 1-க்கு ரூ.5000 ம் வழங்கிட வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்பயிர்களுக்கு ஏக்கர் 1-க்கு ரூ.25000-ம் வழங்க வேண்டும். தென்னை, வாழை, நிலக்கடலை, எண்ணெய் வித்து பயிர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். பயிர் காப்பீடு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை மாநில அரசே பொறுப்பேற்று வழங்க வேண்டும்.
நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023-ஐ திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.29-ல் மாநிலம் தழுவிய அளவில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும். பிப்ரவரி 13-ல் டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் பெருமளவில் விவசாயிகள் பங்கேற்க உள்ளனர்” என்றார்.
தென் மண்டல ஒருங்கிணைப்பாளராக திருப்புவனம் எல்.ஆதிமூலம் தேர்வு செய்யப்பட்டனர். இதில், மாவட்ட நிர்வாகிகள் உசிலம்பட்டி மணிகண்டன், முத்துமீரான், சிவகங்கை மாணிக்கவாசகம், தவம், ராமநாதபுரம் இராமலிங்கம், கண்ணப்பன், தூத்துக்குடி அருமைராஜ், திண்டுக்கல் கொடைக்கானல் செல்வராஜ் உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.