சென்னை: மேளதாளங்கள், கலைநிகழ்ச்சிகளுடன் சென்னையில் பிரதமர் மோடிக்கு நேற்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
3 நாள் பயணமாக தமிழகத் துக்கு வருகை தந்துள்ள பிரதமர்மோடி, சென்னை நேரு விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியாஇளைஞர் விளையாட்டு போட்டியை நேற்று தொடங்கி வைத்தார்.முன்னதாக பிரதமர் மோடி சென்னைக்கு வருகை தருவதையொட்டி, அவரை வரவேற்பதற்காக தமிழக பாஜகவின் 12 பிரிவுகள் சார்பில் பல்வேறு பணிகள் கடந்த ஒருவாரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது.
பிரதமர் மோடி வரும் வழியை ஆய்வு செய்து, தமிழ் பாரம்பரிய முறைப்படி வரவேற்பதற்கான ஏற்பாடுகளை பாஜக மூத்த தலைவர்கள் செய்து வந்தனர்.
விமான நிலையத்தில் வரவேற்பு: இந்நிலையில், பெங்களூருவில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு நேற்று மாலை 4.50 மணிக்கு பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு அவரை, அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, எ.வ.வேலு, கனிமொழி எம்.பி., சென்னை மேயர் பிரியா, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர், புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், பாஜக மூத்த தலைவர்கள் எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் உள்பட 27 பேர் பிரதமர் மோடியை விமான நிலையத்தில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
பின்னர் அங்கிருந்து, 5 மணி அளவில் ஹெலிகாப்டரில் புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி, அடையாறு ஐஎன்எஸ் கடற்படை தளத்துக்கு வந்தடைந்தார். அங்குபிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின்,அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் வரவேற்றனர்.
அதைத்தொடர்ந்து, சிறப்பு பாதுகாப்பு படையினரின் பாதுகாப்புடன் அங்கிருந்து காரில் புறப்பட்டபிரதமர் மோடி, சுவாமி சிவானந்தாசாலை வழியாக நேரு விளையாட்டு அரங்கம் சென்றார். அப்போது, 100-க்கும் மேற்பட்ட சிறுமிகள் பரதநாட்டியத்தை அரங்கேற்றி பிரதமரை வரவேற்றனர்.
மேலும் பொதுமக்கள் சாலையோரம் நின்றுகொண்டு, மலர்களைத் தூவி மோடிக்கு உற்சாகவரவேற்பு அளித்தனர். சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த தஞ்சை பெரிய கோயில் மாதிரி அமைப்பு, அயோத்தி ராமர் கோயில் வரைபடம், ராமர் சிலைஉள்ளிட்டவற்றைப் பார்வையிட்ட படி, அவருக்கு அளித்த உற்சாக வரவேற்பை ஏற்றுக்கொண்டு காரில் சென்றார். பல்லவன் சாலை, சென்ட்ரல் ரயில் நிலையம் வழியாக சென்ற பிரதமர் மோடி, அங்கு ஏற்பாடு செய்யப்படிருந்த சிவ வாத்தியங்கள், நையாண்டி மேளத்துடன் கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் உள்ளிட்ட கிராமிய நிகழ்ச்சிகளை யும் பார்வையிட்டார்.
100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே இடத்தில் அமர்ந்து பாடிய ராமர் கீர்த்தனை, ராமர், பாரதியார், திருவள்ளுவர் உள்ளிட்ட பல்வேறு சான்றோர்கள் வேடம் அணிந்தும், அம்பேத்கர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வேடம் அணிந்தும் சாலையில் நின்று 100-க்கும் மேற்பட்ட சிறுவர்கள், சிறுமிகள், இளைஞர்கள், பிரதமரை வரவேற்றனர்.
போலீஸ் பாதுகாப்பு: அவர்களின் வரவேற்பை ஏற்று மகிழ்ச்சியுடன் கை அசைத்தவாறே நேரு விளையாட்டு அரங்கத்துக்கு சென்ற மோடி, கேலோ இந்தியா விளையாட்டு போட்டியைத் தொடங்கி வைத்தார்.
பிரதமரின் வருகையை யொட்டி, அவர் சென்ற சாலை யின் இரு புறங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.