விஜய் படத்தில் நடிப்பதால் எனது பட புரமோசனுக்கு நேரம் தர முடியாத மீனாட்சி சவுத்ரி : ஆர்ஜே பாலாஜி

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள படம் 'சிங்கப்பூர் சலூன்'. கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி, சத்யராஜ், மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வருகிற 25ம் தேதி வெளிவருகிறது. படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் ஆர்.ஜே.பாலாஜி பேசியதாவது:

எனக்கு ஜோடியாக நடித்துள்ள மீனாட்சி சவுத்ரி புரோமோஷனுக்கு நேரம் தர முடியாத அளவிற்கு பிஸியாக இருக்கிறார். ஆமாம், இப்போது அவர் விஜய்க்கு ஜோடி. இன்னொரு ஹீரோயினும் இருக்கிறார். சில காரணங்களால் அவராலும் வர முடியவில்லை. நட்புக்காக நடித்துக் கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஜீவாவுக்கு நன்றி. இவர்கள் தவிர இன்னொரு பெரிய நடிகர் முக்கியமான ஒரு கதாபாத்திரம் நடித்துள்ளார். அதை இப்போது நாங்கள் சொல்லவில்லை. ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் அவர் எங்களுக்கு நடித்துக் கொடுத்ததற்கு நன்றி.

இயக்குநர் கோகுல் கூட வேலைப் பார்ப்பது சிரமம் என விஜய்சேதுபதி சொன்னார். நாங்கள் அடித்துக் கொண்டோம் என சில செய்திகள் எல்லாம் பார்த்தேன். அப்படி எல்லாம் இல்லை. கோகுலுடன் வேலைப் பார்ப்பது கஷ்டம்தான். ஏனெனில், அவருடைய கதாபாத்திரத்திற்கு நான் எதிராக இருந்தேன். ஆரம்பத்தில் நிறைய விவாதித்தோம். பிறகு கொஞ்சம் கொஞ்சமாகதான் அவருடைய கதைக்கு செட் ஆனேன். இந்தப் பயணம் கடினமாகதான் இருந்தது. ஆனால், ஆர்வத்துடனும் மறக்க முடியாத ஒன்றாகவும் இருந்தது. அடுத்தப் படத்தில் நான் சிறப்பாக நடிக்க இவருடன் வேலைப் பார்த்ததும் முக்கியக் காரணம்.

இந்தக் கதை மீது நான் வைத்த நம்பிக்கையை தயாரிப்பாளரும் வைத்திருந்தார். படத்தில் சலூன் செட் போடவே ஒன்றரை கோடி ஆனது. இந்த வேலை இவர்கள் மட்டும்தான் செய்வார்கள் என்ற ஜாதி மனப்பான்மையை உடைத்து உலகம் எவ்வளவோ தூரம் முன்னேறி விட்டது. எந்த வேலையை யார் பிடித்து செய்தாலும் முன்னேறிக் கொண்டே போகலாம் என்பதுதான் இதன் அடிநாதம். நிறைய பேருக்கு கனெக்ட் ஆகும் என ஆசையாக செய்த படம் இது.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.