இவரை விட சிறந்த லெக் ஸ்பின்னர் நம் நாட்டில் இருப்பதாக நான் நினைக்கவில்லை – ஹர்பஜன் சிங்

மும்பை,

20 அணிகள் கலந்து கொள்ள உள்ள டி20 உலகக்கோப்பை தொடர் வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. கடந்த 50 ஓவர் உலகக்கோப்பையை நழுவவிட்ட இந்திய அணி டி20 உலகக்கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.

இந்நிலையில் இந்த உலகக்கோப்பை தொடரில் இந்தியாவின் முதன்மை ஸ்பின்னர்களாக குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், ஜடேஜா ஆகியோருக்குதான் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. இந்திய அணியின் முன்னணி ஸ்பின்னரான யுஸ்வேந்திர சாஹலுக்கு இந்த தொடரிலும் வாய்ப்பு கிடைப்பதில் சந்தேகம் நிலவுகிறது.

2016-ல் அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் முதன்மை ஸ்பின்னராக உருவெடுத்த சாஹல் 2021 வாக்கில் பார்மை இழந்து தடுமாறினார். இதையடுத்து 2021 டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சாஹலுக்கு பதிலாக அஸ்வின் இடம் பிடித்தார்.

2022 டி20 உலகக்கோப்பை தொடரில் சாஹல் தேர்வு செய்யப்பட்டாலும் விளையாடும் 11 பேர் அணியில் இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில் 2024 டி20 உலகக்கோப்பை தொடரிலும் சாஹலுக்கு இடம் கிடைக்காது என தெரிகிறது.

இந்நிலையில் 2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் கண்டிப்பாக சாஹல் தேர்வு செய்யப்பட வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

நான் மற்றவர்களை விட சாஹலுக்கு முதன்மை ஸ்பின்னராக முன்னுரிமை கொடுப்பேன். அவர் ஏன் கழற்றி விடப்படுகிறார் என்பது எனக்கு தெரியவில்லை. அதற்கான காரணம் அவருக்கும் தெரியாது என்று நினைக்கிறேன். ஆனால் இன்றும் நம்முடைய நாட்டில் அவரை விட சிறந்த லெக் ஸ்பின்னர் இருக்கிறார் என்று நான் கருதவில்லை.

நம்மிடம் அவரை விட தைரியமான ஸ்பின்னர் இருக்கிறார் என்றும் நான் நினைக்கவில்லை. அவருக்கு அடுத்தபடியாக ஜடேஜாவை 2-வது ஸ்பின்னராக நான் தேர்ந்தெடுப்பேன். அதேபோல வாஷிங்டன் சுந்தரை நான் ஆப் ஸ்பின்னராக தேர்வு செய்வேன். வெஸ்ட் இண்டீஸில் இதற்கு முன் நான் விளையாடியுள்ளேன்.

அங்கு எப்போதும் ஸ்பின்னர்களுக்கு கொஞ்சம் ஆதரவு இருக்கும். அங்கு கிட்டத்தட்ட இந்தியாவைப் போன்ற மைதானங்கள் இருக்கும். எனவே நீங்கள் சரியான வீரர்களை தேர்வு செய்வது அவசியம். அங்கே அசத்துவதற்கு உங்களுடைய அணியில் குறைந்தது 3 ஸ்பின்னர்கள் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.