இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக் ஆகியோர் கடந்த 2010 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இரு நாடுகளையும் சேர்ந்த இந்த தம்பதிகளின் திருமணம் இரு நாடுகளிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இருப்பினும், இருவரும் தங்கள் திருமண வாழ்க்கையை சிறப்பாக நடத்தி வந்தனர்.
சானியா மிர்சா – சோயிப் மாலிக் விவாகரத்து
இவர்களுக்கு 2018 ஆம் ஆண்டு இசான் என்ற மகனும் பிறந்தார். இருவரும் தங்கள் விளையாட்டிலும் சிறந்து விளங்கினர். சானியா மிர்சா டென்னிஸ் உலகில் சாதனை படைத்தார். சோயிப் மாலிக் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் முக்கிய வீரராக விளங்கினார். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே சோயிப் மாலிக்கும் சானியா மிர்சாவும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு ஏற்றார் போல் சானியா மிர்சாவும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் சூசகமாக அவ்வப்போது பதிவிட்டு வந்தார். குறிப்பாக சானியா மிர்சா தனது இன்ஸ்டாகிராமில் சோயிப் மாலிக் தொடர்பான விபரம் மற்றும் அவருடன் சேர்ந்து எடுத்த போட்டோக்களை நீக்கியது பரபரப்பை கிளப்பியது.
சோயிப் மாலிக் மறுமணம்
இந்த தகவல்கள் இருவரது ரசிகர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், சோயிப் மாலிக் பாகிஸ்தான் நடிகை சனா ஜாவேத்தை திருமணம் செய்துள்ளார். இந்த தகவல் வெளியானதும் இரு நாடுகளிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சோயிப் மாலிக் – சானியா மிர்சா விவாகரத்து செய்திருப்பதாக சானியா மிர்சாவின் தந்தை இம்ரான் மிர்சா உறுதிப்படுத்தியுள்ளார். சானியா மிர்சா பெண்கள் ஆண்களை விவாகரத்து செய்யும் ‘குலா’ என்கிற இஸ்லாமிய முறைப்படி இந்த திருமண பந்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார்.
சானியா மிர்சா தந்தை விளக்கம்
சோயிப் மாலிக் – சானியா மிர்சா விவாகரத்து இரு நாடுகளிலும் உள்ள அவர்களது ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சானியா மிர்சா இப்போது குடும்பத்துடன் துபாயில் வசித்து வருகிறார். அவர் இப்போது தனிமையை விரும்புவதால் சானியாவை யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.