மதுரை: முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை அலங்காநல்லூர் கீழக்கரையில் வரும் 24ம் தேதி தொடங்கி வைக்கும் புதிய ஜல்லிக்கட்டு அரங்கில் ஆரம்பத்தில் 5 நாட்கள் தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதாக அறிவிக்கபட்டநிலையில் தற்போது ஒரு நாள் மட்டும் போட்டியை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. உள்ளூர் மக்கள் எதிர்ப்பால் அந்த அரங்கில் ஜல்லிக்கட்டு போட்டி ஒரு நாளா? 5 நாட்களா? என முடிவெடுக்க முடியாமல் மாவட்ட நிர்வாகிகள் குழப்பமடைந்துள்ளனர்.
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு பார்க்க உள்நாட்டு, வெளிநாட்டு பார்வையாளர்கள் திரண்டனர். ஆனால், அவர்கள் அனைவரும் ஜல்லிக்கட்டு பார்க்கக்கூடிய வகையில் கேலரிகள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை. அதனால், ஜல்லிக்கட்டு பார்க்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிகழ்வே நடப்பாண்டு வரை தொடர்கிறது.
அதனால், திமுக ஆட்சி வந்ததும், அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் புதிய ஜல்லிக்கட்டு அரங்கம் கட்டப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அறிவித்தப்படி, புதிய ஜல்லிக்கட்டு அரங்கம் கட்டிமுடிக்கப்பட்டு வரும் 24ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அன்று அதே அரங்கில் தமிழக அரசு சார்பில் தற்போது ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுகளை விட பிரமாண்ட பரிசுகள் மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது. அலங்காநல்லூர் மக்கள், பராம்பரியமாக நடக்கும் இடத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக அரசு சார்பில் தொடர்ந்து நடத்த வேண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர்ச்சியாக புதிய அரங்கில் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது, சில நாட்கள் கழித்து மற்றொரு நாளில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். அவர்கள் கோரிக்கையை ஏற்றே பொங்கல் முடிந்து ஒரு வாரம் கழித்து 24ம் தேதி புதிய அரங்கில் ஜல்லிக்கட்டு நடக்கிறது.
இந்த அரங்கில் 5 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து பார்க்கலாம். ஒரு நாள் மட்டும் ஜல்லிக்கட்டு நடத்தினால் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் போலவே விஐபிகளும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும், மதுரை மாவட்டத்துக்காரர்களுமே மீண்டும் ஜல்லிக்கட்டை பார்க்கும் வாய்ப்பெறுவார்கள். வெளியூர்க்கார்கள், மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க வாய்ப்பு இல்லாமல் போகும். அதுபோல் அதிக காளைகளையும் வாடிவாசலில் அவிழ்க்க முடியாமல் போகலாம். அதனால், ஆரம்பத்தில் 24ம் தேதி முதல் தொடர்ச்சியாக 5 நாட்கள் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து தமிழக அரசு ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.
ஆனால், அதற்கு அலங்காநல்லூர் உள்ளூர் மக்கள் மத்தியில் எதிர்ப்பு ஏற்பட்டதாகவும், தொடர்ந்து 5 நாட்கள் அரசு சார்பில் இந்த அரங்கில் போட்டி நடத்தினால் அலங்காநல்லூர் போட்டி புகழ் மங்க வைப்பதாகிவிடும் என அவர்கள் குற்றம்சாட்டினர். மேலும், முதல்வர் வரும்போது போராட்டத்தில் எதுவும் ஈடுபடக்கூடும் என உளவுத்துறையினர் எச்சரித்துள்ளனர். அதனால், உள்ளூர் மக்களிடம் மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி தற்போது புதிய அரங்கில் 5 நாட்கள் தொடர்ந்து போட்டியை நடத்தும் முடிவில் இருந்து பின்வாங்கி 24ம் தேதி ஒரு நாள் மட்டும் போட்டியை நடத்த முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும், மற்றொரு புறம், அதிகாரிகள், உள்ளூர் மக்களுடன் பாரம்பரியமாக நடக்கும் அலங்காநல்லூர் போட்டிக்கு எந்தவகையிலும் பாதிப்பு வராது என்று கூறி தொடர்ந்து 5 நாட்கள் போட்டியை நடத்த ஒத்துழைக்கும்படியும் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. அதனால், புதிய அரங்கில் ஜல்லிக்கட்டு ஒரு நாள் அல்லது 5 நாள் நடக்குமா? என முடிவெடுக்க முடியாமல் அதிகாரிகள் குழப்பமடைந்துள்ளனர்.