சென்னை: மக்களவை தேர்தலில் தமிழகத்தில் கடந்த தேர்தலைவிட அதிக இடங்களில் போட்டியிட வேண்டும். புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரிடம் தமிழக நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் மக்களவை தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலநிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், பல்வேறு அணித் தலைவர்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் ஆகியோருடனான ஆலோசனைக் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில், மேலிட பொறுப்பாளர் அஜோய்குமார், அகில இந்திய செயலர் சிரிவெல்ல பிரசாத் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில்பேசிய நிர்வாகிகள், ‘கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் அதிக இடங்களில் காங்கிரஸ் போட்டியிட வேண்டும். அதற்கேற்ற வகையில் திமுகவிடம் தொகுதிகளை கேட்டு பெற வேண்டும். புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினர்.
கூட்டத்தில் பேசிய அஜோய்குார், 10 நாட்களுக்குள் வாக்குச்சாவடி குழுக்களை அமைக்க வேண்டும். கட்சிக்கு தேர்தல் நிதி திரட்ட வேண்டும். கூட்டணி வெற்றிக்கு அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றார்.
பின்னர் அஜோய்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இண்டியா கூட்டணியில் திமுக தலைவர் ஸ்டாலின் மிகப்பெரிய தலைவராக உள்ளார். தமிழகம், புதுச்சேரியில் அவர்தான் கூட்டணியை வழிநடத்துவார். அவரது தலைமையில் 40 தொகுதிகளிலும் வெற்றி வெறுவோம். திமுக தொகுதி பங்கீட்டு குழுவை அறிவித்துள்ளது. காங்கிரஸ் தொகுதி பங்கீட்டு குழு 2 நாட்களில் அறிவிக்கப்படும். 2 குழுக்களுக்கு இடையேயான கூட்டம் வரும் 28-ம் தேதி நடைபெற வாய்ப்புள்ளது.
முன்னோடி தமிழகம்: மதிய உணவு திட்டம், சமூகநீதி, இடஒதுக்கீடு என அனைத்தையும் சட்டப்படி இயற்றி தமிழகம் இந்தியாவுக்கே முன்னோடியாக திகழ்கிறது. மற்ற மாநில மக்களும் தமிழகத்தை பார்த்து இதை உணர தொடங்கியுள்ளனர். அதற்காக தமிழக தலைவர்களுக்கு மரியாதை செலுத்த கடமைப்பட்டிருக்கிறேன்.
ராமர் கோயிலுக்காக பல்லாயிரம் கோடி ரூபாய்களை செலவு செய்து வரும் மத்திய அரசால்,தமிழக வெள்ள பாதிப்புக்கு ரூ.38ஆயிரம் கோடி நிவாரணத் தொகையை வழங்க முடியவில்லை. தமிழக மக்களுக்கு ஆறுதல் கூற கூட பிரதமர் மோடிக்கு நேரம் இல்லை. இதை தமிழக மக்கள்நினைவில் கொள்ள வேண்டும்.
தமிழக மக்களின் துயரை துடைக்க வராத மோடி, ரங்கத்தில் வழிபாடு நடத்துகிறார். தமிழக மக்களுக்கு ரூ.38 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்காதது குறித்தும், பில்கிஸ் பானுவுக்கு ஏற்பட்ட அநீதி குறித்தும் பிரதமர் பதில் அளிக்க வேண்டும். அவர் தமிழகம் வரும்போதெல்லாம் பாஜகவின் வாக்கு சதவீதம் குறைந்து வருகிறது. திரும்பத் திரும்ப வருவதால் பாஜகவின் வாக்கு வங்கி பூஜ்ஜியமாகும். இவ்வாறு அவர் கூறினார்.
கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறும்போது, “தமிழகத்தில் ஆன்மிக ஈடுபாடு உண்டு. மதவெறி இல்லை. பாஜக ஆன்மிகம் என்றபெயரில் மத வெறியில் ஈடுபடுகிறார்கள். அவர்களால் தமிழகத்தில் வெற்றி பெறவே முடியாது” என்றார்.
முன்னதாக ராகுல் காந்தியின் நடைபயண நேரலை ஒளிபரப்பு வாகனத்தை, கே.எஸ்.அழகிரி, அஜோய்குமார் ஆகியோர் கொடிஅசைத்து அனுப்பி வைத்தனர். அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் செய்திருந்தார்.
இக்கூட்டத்தில் காங்கிரஸ் மூத்ததலைவர்கள் கிருஷ்ணசாமி, ஈவிகேஎஸ் இளங்கோவன், கே.வி.தங்கபாலு, சு.திருநாவுக்கரசர், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, எம்.பி.க்கள் ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத்,கார்த்தி சிதம்பரம், விஜய்வசந்த், மாநில துணைத் தலைவர்கள் கோபண்ணா, பொன்.கிருஷ்ண மூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து அகில இந்திய காங்கிரஸ் சார்பில் நியமிக்கப்பட்ட 31 பேர் கொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் தேர்தல் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், கட்சி நிர்வாகிகள் வலியுறுத்திய கருத்துகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.