புதுடெல்லி: அயோத்தியின் ராமர் கோயில் விழாவுக்கு வரும் ராம பக்தர்கள் தங்க சிறப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வாரணாசியைப் போல் நவீன கூடாரங்களுடன் தற்காலிக நகரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளும் ராமர் கோயில் விழாவுக்கு சுமார் 11,000 பேர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்க உள்ளனர். இவர்களுடன் உள்ளூர் மற்றும் உ.பி வாசிகளும் கலந்துகொள்ள உள்ளனர். இவர்கள் அனைவரும் தங்கும் அளவுக்கு அயோத்தியில் இன்னும் வசதியான ஓட்டல்களும், விடுதிகளும் இல்லை. எனவே, இவர்களுக்காக நவீன கூடாரங்கள் அமைத்து தற்காலிக நகரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இப்பணியில் ஸ்ரீ ராம ஜென்ம பூமி அறக்கட்டளை மற்றும் அயோத்யா வளர்ச்சிக் கழகம் ஈடுபட்டுள்ளன. இவை, அயோத்தியின் மஜஹா குப்தா காட் எனும் 20 ஏக்கர் நிலப்பகுதியில் அமைக்கப்படுகிறது. மற்றொன்று பிரம்ம குண்ட் பகுதியிலும், மூன்றாவது ராம் கதா பூங்காவிலும் அமைக்கப்படுகிறது. நான்காவதாக 25 ஏக்கர் நிலப் பகுதியில் பாக் பிஜைஸி எனும் இடத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
இத்துடன் கர்சேவக்புரம் மற்றும் மணிராம் தாஸ் சாவ்னி ஆகிய பகுதிகளிலும் நவீன கூடார நகரங்கள் இரண்டு அமைக்கப்பட்டுள்ளன. உ.பி-யில் இதுபோல் நவீன கூடாரங்கள் முதன்முறையாக பிரதமர் மோடியின் மக்களவை தொகுதியான வாரணாசியின் கங்கை கரையில் அமைந்தன.
இவற்றில்தான் காசி தமிழ் சங்கமம்-2 வந்தவர்களும் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவற்றைவிட மேலும் பல வசதிகளும் அயோத்தியில் கூடாரங்கள் சிறுசிறு நகரங்களாக அமைக்கப்பட்டுள்ளன.
இதன் இறுதிப் பணியும் முடியும் நிலையில் உள்ளன. இவற்றில் லக்சுரி மற்றும் செமி லக்சுரி என இரண்டு வகைகளில் உள்ளவற்றில் இருவர் தங்கும் வசதி செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்திலும் அவத் மற்றும் பனாரஸி பகுதிகளின் சைவ உணவு வகைகள் பறிமாறப்பட உள்ளன.
இதற்காக ஆங்காங்கே பல பிரம்மாண்டமான சமையலறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், பிரபல சமையல் கலைஞர்கள் தலைமையில் சிறப்பு சமையல் குழுக்கள் பணியாற்ற உள்ளனர்.
ஆன்மிக வழியில் அலங்கரிக்கப்பட்ட கூடாரத்தில் தற்போது இங்கு நிலவும் கடும் குளிரை தாங்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. கூடாரங்களின் முன்பாக திறந்தவெளியில் பாதுகாப்பான முறையில் தீமூட்டி குளிரை சமாளிக்கவும் ஏற்பாடுகள் உள்ளன.
இந்த கூடார நகரங்களில் ராமர் மீதான கதைகளும், கலாசார நடன மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவர்கள் ராமர் கோயில் மற்றும் அயோத்தியின் இதரப் பகுதிகளுக்கும் சென்று வர வசதியாக 50 மின்சார பேருந்துகளும், 200 இ-ரிக்ஷாக்களும் விடப்பட்டுள்ளன.
அயோத்தி நகரின் சுற்றுலா பகுதிகளுடன் வரைபடத்தை அறிய தனியாக ஒரு கைப்பேசி செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலி ஆங்கிலம், இந்தி ஆகியவற்றுடன் தமிழ் உள்ளிட்ட அட்டவணையில் இடம்பெற்ற அனைத்து இந்திய மொழிகளிலும் இயங்கும் வகையில் உள்ளது.
ராமர் கோயில் திறப்பு விழா முடிந்த பின்பும் தொடர்ந்து அயோத்திக்கும் பல லட்சம் பக்தர்கள் வருகை எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி 25 முதல் மார்ச் 25 வரை பாஜக சார்பில் மட்டும் 11 கோடி பக்தர்கள் ரயில் மூலம் அயோத்திக்கு வரவுள்ளனர்.
இதன் காரணமாக, இந்த நவீன கூடாரங்கள் அயோத்தியில் தங்கும் நிரந்தரமான வசதிகள் வரும் வரை நீட்டிக்க உள்ளன. இந்த கூடாரங்களின் ஆயுட்காலம் சுமார் 10 ஆண்டுகள் எனக் கருதப்படுகிறது.