நடிகர் டி.ராஜேந்தரின் இளைய மகனும் சிம்புவின் தம்பியுமான குறளரசன் – நபீலா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.
டி.ஆர். குடும்பத்தின் நெருங்கிய நட்பு வட்டத்திலிருப்பவர்கள். நடிகரும் இயக்குநருமான டி.ராஜேந்தர் உஷா ராஜேந்தர் தம்பதியின் இளைய மகன் குறளரசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தந்தை டி.ராஜேந்தர், தாய் உஷா முன்னிலையில் இஸ்லாம் மதத்துக்கு மாறினார்.
‘குறளரசன் சிறு வயதிலிருந்தே இஸ்லாம் மார்க்கத்தின் மீது நாட்டம் கொண்டிருந்தார். தற்போது, இஸ்லாத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டார். அண்ணா சாலையிலுள்ள மக்கா மசூதி ஜமாத்தார் முன்னிலையில் குறள் இஸ்லாத்துக்கு மாறினார்.

அவர் விருப்பத்துக்கேற்ப பெயர் ஒன்றை வைத்துக்கொள்ள ஜமாத்தில் கூறியுள்ளனர். நானுமே அனைத்து மதத்துக்கும் பொதுவானவன். நாகூர் தர்கா, வேளாங்கண்ணி கோயில், முருகன் கோயில் என மத வேறுபாடில்லாமல் அனைத்து ஸ்தலங்களுக்கும் போய் வருகிறவன். எங்களது தயாரிப்பு நிறுவனத்தின் லோகோ கூட அனைத்து மதங்களின் குறியீடுகளைக் கொண்டதாகத்தான் இருக்கும்’ என அப்போது இது தொடர்பாகப் பேசியிருந்தார் டி.ஆர்.
இஸ்லாம் மதத்தைத் தழுவியதைத் தொடர்ந்து அந்த மதத்தைச் சேர்ந்த நபீலா என்பவருடன் கடந்த 2019-ம் ஆண்டு இவருக்குத் திருமணமும் நடைபெற்றது

இந்நிலையில் தாய்மை அடைந்திருந்த நபீலா கடந்த சில தினங்களுக்கு முன் அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறார். தாயும் சேயும் நலமாக இருப்பதாகத் தெரிவிக்கின்றனர் டி.ஆர் குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள். டி.ராஜேந்தர்-உஷா தம்பதியின் மகள் இலக்கியாவுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மகன் பிறந்ததன் மூலம் தாத்தா ஆன டி.ஆர் அதைக் கொண்டாடியது நினைவிருக்கலாம். இந்தச் சூழலில் தற்போது மீண்டும் தாத்தா ஆகியிருக்கிறார் டி.ஆர்.