சென்னை மாநகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கிளம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இதை சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இங்கிருந்துதான் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. “நீண்ட தூரம் பயணிக்க வேண்டி இருக்கிறது. போதுமான அளவுக்கு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படவில்லை” என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இருப்பினும் தனியார் ஆம்னி பேருந்துகள் வழக்கம் போல கோயம்பேட்டில் இருந்துதான் இயக்கப்படுகின்றன. இந்த சூழலில் கிளம்பாக்கத்திலிருந்துதான் ஆம்னி பேருந்துகளையும் இயக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதற்கு உரிமையாளர்கள் சங்கம், ‘தைப்பூசம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு தொடர் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ள 60,000 பயணிகள் இடையூறு இல்லாமல் பயணிக்க, ஆம்னி பேருந்துகளை சென்னை நகருக்குள் இருந்து இயக்க அரசு அனுமதிக்க வேண்டும்’ எனக் கூறி எதிர்ப்பு தெரிவிக்கவே, சர்ச்சை வெடித்தது. இது குறித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அன்பழகன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “ஆம்னி பேருந்துகளில் 30 முதல் 90 நாள்கள் வரை அட்வான்ஸ் புக்கிங் நடைபெறுகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை தென் தமிழகம் செல்லும் அனைத்தும் ஆம்னி பேருந்துகளுக்கு பயன்படுத்தி வருகிறோம். அங்கு 27 டிராவல்ஸ் அலுவலகங்களும், 77 பயணிகளை ஏற்றும் இடங்களும், 67 ஆம்னி பேருந்துகள் நிறுத்தி வைப்பதற்கும் என ஆக மொத்தம் 144 ஆம்னி பேருந்துகள் நிறுத்தும் இடங்களே உள்ளன.
தினசரி சாதாரண நாள்களில் 850 ஆம்னி பேருந்துகளும், வார இறுதி நாள்களில் 1,250 ஆம்னி பேருந்துகளும்… விழா காலங்களில் பயணிகளின் தேவைக்கேற்றவாறு 1,600 வரை ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 144 ஆம்னி பேருந்துகள் மட்டுமே நிறுத்த முடியும். இந்நிலையில் ஒட்டுமொத்த ஆம்னி பேருந்துகளையும் (தினசரி சுமாராக ஆயிரம் பேருந்துகள்) கிளாம்பாக்கத்தில் நிறுத்தி இயக்க சாத்தியக்கூறுகள் இல்லை. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகில் முடிச்சூர் ரோடு வரதராஜபுரத்தில் 5 ஏக்கர் பரப்பளவில் அரசால் ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்காக இடம் அமைக்கும் வேலை நடைபெற்றுக் கொண்டுள்ளது. இந்த இடம் வேலை முடிவதற்கும் சுமாராக ஆறு மாதம் காலம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த இடம் தயாராகும் வரை பேருந்துகள், கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் வரவேண்டிய சூழ்நிலை இருக்கிறது. எனவே ஆம்னி பேருந்துகளை கோயம்பேட்டில் இருந்து இயக்குவதற்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று பல பலமுறை கோரிக்கை வைத்து இருக்கிறோம். மேலும் CMDA நிர்வாகத்திடம் 1,000 ஆம்னி பேருந்துகளை KCBT-யில் பகலில் நிறுத்தி வைத்து பராமரித்து, இரவில் இயக்குவதற்கு சாத்தியக்கூறுகள் பற்றி நாங்கள் பலமுறை கேள்விகளை எழுப்பி இருக்கிறோம். இதற்கு அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை. 2002-ல் உயர் நீதிமன்றம் விதித்த ஆணையை (WP.41607 of 2002 dated 30.12.2003) அவமதித்து 22.01.2024 அன்று `ஆம்னி பேருந்துகள் 24.01.2024 முதல் சென்னை நகரத்திற்குள் வர அனுமதி இல்லை. இரண்டு நாள்கள் மட்டும் கால அவகாசம்’ என சுற்றறிக்கை திடீரென அனுப்பப்பட்டுள்ளது.
இதனால் ஆம்னி பேருந்துகளில் 30 முதல் 90 நாள்களுக்கு முன்னே முன்பதிவு செய்துள்ள பயணிகளின் பயணங்கள் கேள்விக்குறியாகி இருக்கிறது. அவர்கள் பல குழப்பங்களுக்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் உயர் நீதிமன்ற ஆணையை மீறி சுற்றறிக்கை அனுப்பிய போக்குவரத்து துறைக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ், ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் சார்பாக வழங்கப்பட்டுள்ளது. KCBT-யில் ஆம்னி பேருந்துகள் இயக்குவது சம்பந்தமாக அரசு சார்பாக எங்களுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் 51 டிராவல்ஸ் அலுவலகங்களும், 80 பயணிகளை ஏற்றும் இடமும், 320 பேருந்துகளை நிறுத்தி வைக்கும் இடம் என ஆக மொத்தம் 400 ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்கான வசதி உள்ளது. ஆகையால் முதல்வர் தலையிட்டு ஆம்னி பேருந்துகளில் 30 முதல் 90 நாள்களுக்கு முன்பே முன்பதிவு செய்துள்ள பயணிகளின் பயணங்கள் தடைப்படாமல் இருக்க, போக்குவரத்துத்துறை மற்றும் CMDA உத்தரவுக்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவித்திருந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இரண்டு நாள்களில் இடத்தை காலி செய்ய வேண்டும் என்று கூறுவது சாத்தியமற்ற விஷயம். தைப்பூசம், குடியரசு தினவிழாவையொட்டி தொடர்ந்து 4 நாள்கள் விடுமுறை என்பதால், 60 ஆயிரம் பயணிகள் இன்று டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். இப்போது அரசு திடீரென இங்கிருந்து உடனடியாக பேருந்துகளை மாற்ற வேண்டும் என கூறுவது சாத்தியமற்றது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 144 பார்க்கிங் பே (Parking Bay) தான் இருப்பதாக கூறுகின்றனர். ஆயிரம் ஆம்னி பேருந்துகளை இந்த 144 நிறுத்தத்தில் எப்படி நிறுத்துவோம்… CMDA அதிகாரிகள் யாரும் எங்களை தொடர்பு கொள்ளவில்லை. எங்களுக்கோ, சங்கத்தினருக்கோ ஒரு சுற்றறிக்கையும் வரவில்லை. இருப்பினும் அரசு ஏன் கடந்த இரண்டு நாள்களில் தீவிர நடவடிக்கை எடுக்கிறது என்பது கேள்விக்குறியாக உள்ளது. தொடர் விடுமுறையை முன்னிட்டு 2 லட்சம் பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். எனவே, இதனால், பாதிக்கப்படப்போவது பயணிகள்தான். எனவே, பயணிகள் நலன் கருதி தமிழக முதல்வர் தலையிட்டு, இது குறித்து எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பயணிகள் பாதிக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வெடித்திருந்தார்.
இந்தச் சூழலில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, “முதல்வர் ஸ்டாலின் கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் 88.52 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்தியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையங்களுள் ஒன்றான கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை திறந்து வைத்தார். அது, மிகச் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தினம்தோறும் 5,000-க்கும் மேற்பட்ட பயணிகள் தற்போது பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் மகிழ்ச்சியோடு பயன்படுத்துகிற அளவுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு ஏற்றார்போல் அரசு செயல்பட முடியாது. மக்களுடைய தேவைகளுக்கும், மக்களுடைய விருப்பத்துக்கும்தான் அரசு செயல்பட முடியும். புதிய பேருந்து முனையம் திறக்கப்படுவதற்கு முன்பாகவே ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறோம்.

அப்போது அவர்கள் ‘படிப்படியாக ஆம்னி பேருந்துகளை புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்குவோம்’ என்றனர். பிறகு 24-ம் தேதி வரையில் கால அவகாசம் கேட்டனர். இப்போது ‘கிளம்பாக்கத்திலிருந்து இயக்ககுவதற்கு நாங்கள் தயாராக இல்லை’ என்கிறார்கள். அரசு அவர்களுடைய விருப்பம்போல் செயல்பட முடியாது, மக்களுடைய விருப்பத்துக்கு ஏற்றார்போல்தான் அரசு செயல்படும். எனவே இன்று முதல் ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து இயக்குவதற்கு முழுமையாக தடை செய்யப்படும். கிளாம்பாக்கத்திலிருந்துதான் இயக்க வேண்டும். அதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்திருக்கிறோம். எனவே உரிமையாளர்கள் அரசுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்” என்றார்.
இதற்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து கோயம்பேட்டில் போலீஸார் குவிக்கப்பட்டனர். தடுப்புகள் அமைக்கப்பட்டு பேருந்துகள் திருப்பிவிடப்பட்டது. இதற்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இவ்வாறு அரசுக்கும், உரிமையாளர்களுக்கும் இடையில் நிலவி வரும் முரணால், ஆம்னி பேருந்துகளில் பயணிக்க முன்பதிவு செய்திருந்தோர் பெரும் அவதிக்குள்ளாகினர். எங்கு செல்வது என தெரியாமல் அவர்கள் விழிபிதுங்கி நின்றனர். இந்தச் சூழலில் போலீஸாரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, பேருந்து நிலையத்தின் நுழைவாயில்கள் அனைத்தும் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டன.





ஒருவழியாக போலீஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கோயம்பேடு பேருந்து நிலையம் கொண்டுவரப்பட்டது. இரவு 7 மணிக்கு பிறகு ஆம்னி பேருந்துகளும், பயணிகளும் உள்ளே செல்ல முடியாத நிலை உருவானது. பிறகு கோயம்பேடு வந்த பயணிகள் அங்கிருந்து கிளம்பாக்கத்துக்கு சென்றனர். சிலர் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கிழக்கு கடற்கரை சாலை, வேலூர் போன்ற பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் மட்டும் நீண்ட சோதனைக்குப் பிறகே கோயம்பேட்டில் இருந்து பயணிகளோடு வெளியே வர அனுமதிக்கப்பட்டன. இந்த சூழலில் நீதிமன்றத்தை நாட போவதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY