சுற்றுலா சிறப்பு வாய்ந்த நீலகிரியில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மேத மாதங்களில் கோடை சீசன் நடத்தப்படுகிறது. கொளுத்தும் கோடை வெயிலில் இருந்து தப்பிக்க குளிர்ந்த நீலகிரியை நோக்கி வரும் பயணிகளைக் கவர மாவட்ட நிர்வாகம் மூலம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவது வழக்கம்.

அதிலும் குறிப்பாக, தோட்டக்கலைத்துறை மூலம் பராமரிக்கப்படும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, தொட்டபெட்டா தேயிலை பூங்கா ஊட்டி ரோஜா பூங்கா உள்ளிட்ட பூங்காக்களில் கோடை சீசனில் லட்சக்கணக்கான மலர் செடிகள் பூத்துக்குலுங்கும்.
அரசு பூங்காக்களில் கோடை சீசனுக்காக பணிகள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் வாரத்தில் துவங்குவது வழக்கம். இந்த நிலையில் , நூற்றாண்டு பழைமை வாய்ந்த குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மலர் நாற்று நடவு பணிகளை தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தொடங்கி வைத்தனர். 30 ரகங்களில் சுமார் 3 லட்சம் மலர் நாற்றுகளை நடவு செய்யும் பணியில் பூங்கா பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து தெரிவித்த தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், ” மே மாத கோடை சீசனில் சிம்ஸ் பூங்காவில் 64- வது ஆண்டு பழ கண்காட்சி நடைபெற இருக்கிறது. பயணிகளின் கண்களுக்கு விருந்து படைக்கும் வகையில் சால்வியா, மேரி கோல்டு, டேலியா, டயான்தஸ், ஆஸ்டர், லூபின் உள்ளிட்ட 130 ரகங்களில் 3 லட்சம் மலர் நாற்றுகளை உற்பத்தி செய்திருக்கிறோம். தற்போது நடவு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏப்ரல், மே மாதங்களில் இவை அனைத்தும் பூத்துக்குலுங்கும் ” என்றனர்.