கிளிநொச்சியில் சட்ட விரோத மணல் அகழ்வு தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

கிளிநொச்சி மாவட்டத்தில் சட்ட விரோத மணல் அகழ்வு தொடர்பில் விசேட கலந்துரையாடல் நேற்று (24) புதன்கிழமை காலை 11.30மணிக்கு நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் அவர்களின் தலைமையில், மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இங்கு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் :

கிளிநொச்சி மாவட்டத்தில் சட்ட விரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக கடந்த கூட்டங்களில் பொலீஸ், இராணுவம், கடற்படை பிரிவுகளுக்கு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரால் வலியுறுத்தப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. ஆனால் தற்போது குறித்த நடவடிக்கைகளில் தளர்வு நிலை காணப்படுகிறது.

இதற்காகவே குறுகிய காலத்தில் இக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியமானது என தெரிவித்தார்.

இதன்போது, மாவட்டத்தில் சட்ட விரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக சம்மந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டது.

மேலும், கிளிநொச்சி குளத்தின் சுற்றுச் சூழல் பாதுகாப்பு தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக பிரதேச சபையினால் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி), திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரின் இணைப்பாளர், கண்டாவளை பிரதேச செயலாளர், உதவி மாவட்ட செயலாளர், பச்சிலைப்பள்ளி உதவி பிரதேச செயலாளர், கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர், துறைசார் திணைக்கள தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள், இரணைமடு கமக்காரார் அமைப்பின் செயலாளர், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.