புதிய அரங்கத்தில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் முதலிடம் பிடித்த வீரருக்கும், காளை உரிமையாளருக்கும் லேட்டஸ்ட் மாடல் மஹிந்திரா தார் காரைப் பரிசாக வழங்கி அசத்தியுள்ளார்கள்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் கட்டப்பட்ட புதிய ஜல்லிக்கட்டு அரங்கத்தில் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் கலந்துகொண்ட மாடுபிடி வீரர்களும், காளை வளர்ப்போரும் கார், பைக், சைக்கிள் எனப் பரிசு மழையில் நனைந்தார்கள்.
கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் நடந்த போட்டியில் 478 காளைகளும், 250 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். 5 சுற்றுகளிலிருந்து தேர்வு செய்யப்பட்ட சிறந்த மாடுபிடி வீரர்கள் இறுதிச் சுற்றில் கலந்து கொண்டனர்.

இறுதிச் சுற்றில் 10 காளைகளைப் பிடித்துச் சிறப்பாக விளையாடிய சிவகங்கை மாவட்டம் பூவந்தியைச் சேர்ந்த அபி சித்தர் முதல் பரிசாக மஹிந்திரா தார் காரும், 1 லட்ச ரூபாயும் பரிசாகப் பெற்றார்.
இரண்டாவது இடம் வந்த தமிழரசன், விளாங்குடி பரத்குமார் ஆகியோருக்கு பைக் பரிசும், பணப்பரிசும் பகிர்ந்து அளிக்கப்பட்டது. மூன்றாவது இடம் வந்த மணிகண்டனுக்கு 50 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.

இதேபோன்று சிறப்பாகக் களமாடி முதலிடம் வந்த புதுக்கோட்டை மாவட்டம் கணேஷ் கருப்பையாவின் காளைக்கு மஹிந்திரா தார் காரும்,1 லட்சம் ரூபாய் பரிசும் வழங்கப்பட்டது.
இரண்டாம் இடம் வந்த திருச்சி அணைக்கரை வினோத்தின் காளைக்கு பைக் மற்றும் 75 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது. மூன்றாவது இடம் வந்த மதுரை அண்ணாநகர் பிரேம் ஜெட்லியின் காளைக்கு 50 ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

போட்டியில் சிறப்பாக விளையாடிய மாடுபிடி வீரர்களுக்கும், காளையின் உரிமையாளர்களுக்கும் தங்க மோதிரம், தங்க நாணயங்கள் சைக்கிள் உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன.
ஏற்கெனவே மதுரை மாவட்டம் பாலமேடு, அவனியாபுரம், அலங்காநல்லூர் என ஒவ்வொரு ஜல்லிக்கட்டிலும் முதலிடம் வந்த வீரர், காளைகளுக்கு நிஸ்ஸான் காரும், இரண்டாமிடம் வந்தவர்களுக்கு அப்பாச்சி பைக்குகளும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் புதிய ஜல்லிக்கட்டு அரங்கில் நடைபெற உள்ள போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மஹிந்திரா தார் காரும், பைக்குகளும் வழங்கப்படுகிறது.