மட்டக்களப்பு மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்பின் தரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவுகளை இரவிலும் பரிசோதிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி . சுகுணனின் ஆலோசனைக்கிணங்க அவரின் தலைமையிலான குழுவினர் இச்செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு நகரில் செயற்படும் உணவகங்கள், சிற்றுண்டிசாலைகள் மற்றும் அவற்றில் தயாரிக்கப்படும் உணவின் தரம் தொடர்பான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பொதுச்சுகாதார உத்தியோகத்தர்களால் திடீர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு பாவனைக்கு உதவாத பல பொருட்கள் அழிக்கப்பட்டதுடன் வழக்குகளும் பதிவுசெய்யப்பட்டன.
இதன்போது உரிய சுகாதார முறைகள் பின்பற்றப்படாத உணவகங்கள் எதிர்காலத்தில் தொடர்ந்தும் திடீரென சுற்றிவளைக்கப்பட்டு அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி.சுகுணன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.