புதுடெல்லி: ”அரசியலில் நிரந்தரமாக மூடும் கதவுகள் ஏதுமில்லை. தேவைக்கு ஏற்ப அவை திறக்கப்படும்” என்று பாஜக எம்.பி.யும், பிஹார் முன்னாள் துணை முதல்வருமான சுஷில் மோடி தெரிவித்துள்ளார். பிஹார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி உள்ளது. மேலும் இண்டியா கூட்டணியிலும் ஐக்கிய ஜனதா தளம் உள்ளது. கடந்த சில மாதங்கள் வரை, இண்டியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ஆவதற்கு வாய்ப்பிருக்கும் தலைவர்களின் பட்டியலில் இடம்பெற்றிருந்த நிதிஷ் குமார், ஒருங்கிணைப்பாளர் பதவி கிடைக்காத விரக்தியில் இருந்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது. இதனால், ராஷ்ட்ரீய ஜனதா தள (ஆர்ஜேடி) கட்சியுடனான கூட்டணியிலிருந்து விலகி பாஜக கூட்டணிக்கு பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் பிஹார் முன்னாள் முதல்வர் சுஷில் குமார் மோடி, ”அரசியலில் நிரந்தரமாக மூடும் கதவுகள் ஏதுமில்லை. தேவைக்கு ஏற்ப அவை திறக்கப்படும்” என்று கருத்து தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் நட்டா, பிஹார் பாஜக தலைவர் சாம்ராட் சவுத்ரி, சுஷிஷ் குமார் மோடி, மத்திய அமைச்சர் நித்யானந்த் ராய், பாஜக பொதுச் செயலாளரும், பிஹார் மாநில பாஜக பொறுப்பாளருமான வினோத் தாவ்டே ஆகியோர் கலந்து கொண்ட முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சுஷில் குமார் மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார். இதற்கிடையில் இன்று (சனிக்கிழமை) பாஜக, ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் தத்தம் சட்டப்பேரவை குழுவைக் கூட்டி ஆலோசிக்கிறது.
அவசரம் காட்ட விரும்பாத பாஜக: நிதிஷ் குமாரின் அடுத்த நகர்வு என்னவாக இருக்குமென்பது குறித்த எதிர்பார்ப்புகள் தேசிய அரசியல் களத்தில் எழுந்துள்ள நிலையில், பிஹார் மாநில பாஜக வட்டாரமோ தாங்கள் நிதிஷுடன் கூட்டு சேர்வதில் எந்த அவசரமும் காட்டவில்லை எனத் தெரிவிக்கின்றது. இன்று இது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தப்படுவதாகவும் கூறியுள்ளது. பிஹார் பாஜகவின் இன்னொரு தரப்பினர், “நிதிஷ் பாஜகவுடன் கூட்டணி அமைக்கிறார். அமைச்சரவையில் பாஜகவில் இருந்து துணை முதல்வர் அமர்த்தப்படுவார், இதற்காக மக்களவை – மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படாது என உறுதியளிக்கப்படும்” எனத் தெரிவிக்கின்றனர். இவை எல்லாம் கூடிவந்தால் நாளை பிஹாரில் நிதிஷ் – பாஜக ஆட்சி அமையும். மீண்டும் சுஷில் குமார் மோடி துணை முதல்வர் ஆவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தகைய சூழலில் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தேசிய துணைத் தலைவர் சிவானந்த் திவாரி, “நிதிஷ் குமாருக்கு குறைந்தபட்ச சுயமரியாதை இருந்தாலும் கூட அவர் மீண்டும் பாஜகவுக்கு செல்ல மாட்டார்” என்று காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.
மகாகத்பந்தன் கூட்டணி என்னவாகும்? நிதிஷ் குமார் மீண்டும் பாஜக பக்கம் சாய்ந்தால் அங்கு மகாகத்பந்தன் கூட்டணியின் பலம் 114 ஆக குறையும். இதில் ஆர்ஜேடி 79, காங்கிரஸ் 19, இடது சாரிகள் 16 ஆகும். அதேவேளையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் 127 ஆக உயரும். ஐக்கிய ஜனதா தளம் 45, 243 சட்டப்பேவை உறுப்பினர்களைக் கொண்ட பிஹார் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 122 எம்எல்ஏக்களின் ஆதரவு வேண்டும். பாஜக எம்எல்ஏக்கள் 122 பேரும் ஆதரவை நல்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.