இளையராஜா: தாய், தாரம் இப்போது மகள் பவதாரணி – கண்ணீராக ஓடும் முல்லைப்பெரியாறு!

இசைஞானி இளையராஜாவின் தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பங்களா வளாகத்தில் அவரின் மகள் பவதாரணி உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க, உறவினர்கள், இசை ஆர்வலர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வந்துச் சென்றுகொண்டிருக்கின்றனர்.

இளையராஜாவின் லோயர்கேம்ப் பங்களா

இதற்கிடையே நம்மிடம் பேசிய கூடலூரைச் சேர்ந்த கணேஷ்குமார், “முல்லைப்பெரியாறு அணையில் இருந்து குழாய் மூலமாகக் கொண்டுவரப்படும் நீர், லோயர்கேம்ப் பகுதியில் ஆறாக ஓடத் தொடங்குகிறது. இந்த ஆற்றங்கரையோரத்தில் 50 ஆண்டுகளுக்கு முன் இளையராஜா ஐயா நிலம் வாங்கினார்.

கணேஷ்குமார்

அந்தக் காலகட்டத்தில் ஐயாவின் தாயார் சின்னத்தாயி தீபாவளி தினத்தன்று உயிரிழந்தார். அவரின் உடல் இங்கு கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. பின் அந்த இடம் நினைவிடமாக மாற்றப்பட்டது.

அப்போது முதல் தீபாவளியையொட்டி வரும் அமாவாசை தினத்தை கணக்கிட்டு 3 நாள்கள் ஐயா குடும்பத்துடன் இந்த பங்களாவுக்கு வந்து தங்குவார். பிறகு 2011-ல் ஐயாவின் மனைவி ஜீவாவும் தீபாவளியையொட்டிதான் உயிரிழந்தார். இதனால் தீபாவளியன்று இப்பகுதி மக்களை அழைத்து சிறப்பான உணவு வகைகளுடன் அன்னதானம் அளிப்பார். அப்போது மூத்த மகன் கார்த்திக் ராஜா, பவதாரணி, யுவன் சங்கர்ராஜா மற்றும் அவரின் குடும்பத்தினர் அனைவரும் அஞ்சலி செலுத்தி விட்டு ஐயாவுடன் இருப்பார்கள்.

இளையராஜாவின் தாய், மனைவி நினைவிடம் இடையே மகள் உடல் அடக்கம் செய்யப்பட உள்ள இடம்

பண்ணைபுரத்தைச் சேர்ந்த உறவினர்கள் சமையல் செய்து கொடுப்பார்கள். ஐயா ஆற்றங்கரையோரத்தில் தனியாக தியானம், நடைபயிற்சியில் ஈடுபடுவார். அப்போது இப்பகுதி மக்கள் நுழைவு வாயில் பகுதியில் நின்று பார்த்தால் அழைத்துப் பேசுவார். இப்படிப்பட்ட இடத்தில் ஐயாவின் குடும்பத்தில் தாய், தாரத்திற்கு அடுத்து மகளையும் இங்கு அடக்கம் செய்யவுள்ளது முல்லைப்பெரியாறு நீர் கண்ணீராக ஓடும் அளவுக்கு கண்ணீரை வரவழைக்கிறது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.