மட்டக்களப்பில் காணிப்பயன்பாட்டுத் திட்டமிடல் பிரிவின் கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்ட காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் குழுவின் 2024ஆம் ஆண்டு முதலாம் காலாண்டுக்கான கலந்துரையாடல் இன்று (26) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜே ஜே முரளீதரன் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்டத்தின் தெரிவுசெய்யப்பட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளில் காணிகளை பல்வேறு வேலைத்திட்டங்களுக்காகப் பயன்படுத்துவதற்கு அனுமதிப்பதற்கான முன்னேற்பாடுகள் குறித்து கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

இதன்போது கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை, மண்முனை வடக்கு மட்டக்களப்பு, மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படும் பல திட்டங்களுக்கான முன்மொழிவுகள் அரசாங்க அதிபரினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், சில வேலைத்திட்டங்களுக்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

இவற்றில் மண்முனை வடக்கில் படகுச்சேவை, மிதக்கும் சூரிய சக்தி மின் உற்பத்தி, சுற்றுலாப் பயணிகளுக்கான படகுச்சேவை, மீன்வாடி அமைத்தல், வாகனேரியில் ஒருங்கிணைந்த பண்ணை, கரவெட்டியில் சத்துமா உற்பத்தி நிலையத்திற்கான தானியங்களை வழங்கும் தானியப் பயிர்ச்செய்கை, கறுவாக்கேணியில் சீமெந்து கல் உற்பத்தி, வர்த்தக நோக்கம் போன்ற வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்காக காணிகளை உபயோகிப்பதற்கான அங்கீகாரமளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்ஷினி ஸ்ரீகாந்த், கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தவிசாளர் பி. மதனவாசன், உட்பட காணிப் பயன்பாடு, வனவளம், கரையோரப் பாதுகாப்பு, ஆகிய திணைக்களங்கள், தேசிய நீர் உயிரின வளர்ப்பு மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபைகள் என்பவற்றின் அதிகாரிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.