சென்னை: தேமுதிக தலைவர் மறைந்த விஜயகாந்துக்கு காலம் கடந்து பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக அவரது மனைவியும் கட்சியின் பொதுச்செயலாளருமான பிரேமலதா தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமையகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில், அவரது 30-ம் நாள் நினைவு நிகழ்ச்சி நேற்று அனுசரிக்கப்பட்டது. குடியரசு தினம் என்பதால் விஜயகாந்த் நினைவிடம் தேசியக் கொடியால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்கு விஜயகாந்த் மனைவி பிரேமலதா, மகன்கள் விஜயபிரபாகரன், சண்முகபாண்டியன், தேமுதிக துணை செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி உள்ளிட்ட நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். இதேபோல் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.
இதனிடையே, விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டதையொட்டி, அவரது குடும்பத்தினரை பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதிசீனிவாசன் நேற்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் வானதி சீனிவாசன் கூறும்போது, ‘‘விஜயகாந்த் சினிமாவிலும், அரசியலிலும் அளித்த பங்களிப்புக்காக பொருத்தமான நேரத்தில் பத்ம பூஷண் விருது வழங்கியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரி விக்கிறோம். அவரது குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்து, வாழ்த்து செய்தியோடு ஆறுதலை தெரிவித்தோம்’’ என்றார்.
பிரேமலதா கூறும்போது, ‘‘நேற்று முன்தினம் காலையிலேயே மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்போது, காலம் கடந்து, காலன் எடுத்துச் சென்றபிறகு விஜயகாந்துக்கு விருது கிடைத்துள்ளது.
அவர் இருந்த காலத்திலேயே இந்த விருது கிடைத்திருந்தால் அவரை நேசிக்கும் அத்தனை நல்ல உள்ளங்களும் மிகவும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டிருப்போம். எனினும், இந்த கவுரவமான விருதுக்கு மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இந்த விருதை விஜயகாந்த் மீது அன்பு கொண்ட அனைவருக்கும் சமர்ப்பிக்கிறோம்’’ என்றார்.