கணவன் மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டு பிரிந்துவிட்டால், உடனே மனைவி, கணவரிடம் பராமரிப்பு தொகை கேட்பது வழக்கம். ஆனால் தனக்கு போதிய வருமானம் இல்லை என்று கூறி, பராமரிப்பு தொகை கொடுக்க முடியாது என்று கணவர்கள் சொல்வதுண்டு. இது போன்ற நேரங்களில் மனைவி நீதிமன்றம் மூலம் நிவாரணம் தேடிக்கொள்வது வழக்கம். நீதிமன்றம் உத்தரவிட்டாலும் சிலர் பராமரிப்பு தொகை கொடுக்காமல் இழுத்தடிப்பார்கள். உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ராகவ் என்பவர் 2015-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாக கூறி, 2016-ம் ஆண்டு ராகவி மனைவி அவரைப் பிரிந்து, தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
அதோடு வரதட்சணை கொடுமை தொடர்பாக ராகவ் மனைவி போலீஸில் புகாரும் செய்தார். மேலும் தனக்கு ராகவ் பராமரிப்பு தொகை வழங்கவேண்டும் என்று கோரி, குடும்ப நல நீதிமன்றத்தில் அவர் மனைவி மனுத்தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், ராகவ் தனது மனைவிக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் பராமரிப்பு தொகை வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டது.
அந்த உத்தரவை எதிர்த்து ராகவ் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அம்மனுவில், ”எனது மனைவி ஒரு பட்டதாரி. அவர் ஆசிரியர் வேலையில் மாதம் ரூ.10 ஆயிரம் சம்பாதிக்கிறார். எனக்கு உடல் நிலை சரியில்லை, எனது பெற்றோர் மற்றும் சகோதரிகளை நான் கவனிக்க வேண்டியிருக்கிறது. நான் கூலி வேலைதான் செய்கிறேன். வாடகை வீட்டில் குடியிருக்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

ராகவ் மனுவை நிராகரித்த நீதிமன்றம், “தனது மனைவி வேலை செய்து 10 ஆயிரம் சம்பாதிக்கிறார் என்பதற்கு, ராகவ் எந்தவித ஆவணங்களையும் தாக்கல் செய்யவில்லை. உடல் நலத்துடன் இருக்கும் கணவர், உடல் உழைப்பு மூலம் வருமானம் ஈட்ட முடியும். கூலி வேலை செய்தால் கூட தினமும் 300 முதல் 400 ரூபாய் வருமானம் ஈட்ட முடியும். வேலை மூலம் வருமானம் இல்லாவிட்டாலும், கணவன் மனைவிக்கு பராமரிப்பு தொகை கொடுக்கவேண்டியது கடமை” என்று உத்தரவிட்டது.