கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த செங்காளி வலசு பகுதியைச் சேர்ந்தவர் சிவஞானம் (வயது: 37). இவர், கர்நாடக மாநிலம், பெங்களூர் பகுதியில் தங்கி ஃபைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரின் தாய், தந்தை மட்டும் சொந்த ஊரில் உள்ள தோட்டத்து வீட்டில் தங்கியுள்ளனர். இந்நிலையில், சிவஞானம் தன்னுடைய தாய், தந்தையைப் பார்ப்பதற்காக சொந்த ஊருக்கு வந்து தங்கியுள்ளார். அவரின் தாய், தந்தை இருவரும் அருகில் உள்ள கோயிலுக்கு சாமி கும்பிடச் சென்ற நிலையில், வீட்டில் சிவஞானம் மட்டும் தனியாக இருந்துள்ளார்.

அதை நோட்டமிட்ட 3 பேர் கொண்ட மர்ம கும்பல், சிவஞானத்தின் தோட்டத்து வீட்டுக்குச் சென்றுள்ளது. முன்கதவு சாத்தியிருந்ததால், அந்த கும்பல் `நாங்கள் திருப்பூர் மாவட்டம், வெள்ளைக்கோவில் பகுதியைச் சேர்ந்தவர்கள். வீடு கட்டுவதற்காக நாங்கள் இங்கு இன்ஜினீயரைப் பார்க்க வந்திருக்கிறோம்’ எனக் கூறி கதவைத் தட்டியதும், அவர்கள் சொன்ன தகவலை நம்பி சிவஞானம் வீட்டுக் கதவை திறந்துள்ளார்.
அப்படி கதவை அவர் திறந்தவுடன், வீட்டிற்கு உள்ளே வந்து கதவை தாளிட்டுவிட்டு கத்தியை காட்டி அவரை மிரட்டியதாகச் சொல்லப்படுகிறது. அப்போது, அந்த மூன்று பேரும் தங்கள் கைகளில் கையுறை, முகத்தில் மாஸ்க் அணிந்த நிலையில் இருந்துள்ளனர். அதோடு, ‘பணம் எங்கே இருக்கிறது?’ என்று கேட்டு மிரட்டியுள்ளனர். அவர்களின் மிரட்டலுக்கு பயந்து சிவஞானம் கொடுத்த தகவல் அடிப்படையில், அவரது வீட்டில் வைத்திருந்த 40 லட்சம் ரூபாய் பணம், நான்கரை சவரன் தங்கம் ஆகியவற்றை அந்தக் கும்பல் கொள்ளையடித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு, அந்தக் கும்பல் அங்கிருந்து எஸ்கேப் ஆகியிருக்கிறது. இது குறித்து, அரவக்குறிச்சி காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவுசெய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், அந்தப் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலர், “அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மூன்று மாத காலமாகப் பல்வேறு வீடுகளில் நகை, பணம், இருசக்கர வாகனம் என பல்வேறு திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. ஆனால், இதுவரை எந்த ஒரு குற்றவாளியும் கைதுசெய்யப்படவில்லை. ஆனால், அப்பகுதியைச் சேர்ந்த போலீஸார் மேற்படி குற்றச் சம்பவங்களை மூடி மறைப்பதில் மும்முரமாக உள்ளனர். இப்போது, வீட்டுக்குள்ளேயே புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி, மர்ம கும்பல் பணத்தை பறித்துச் செல்லும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது. போலீஸார் தங்களது துரித நடவடிக்கையை மேற்கொள்ளாவிட்டால், இது போன்ற கொள்ளைச் சம்பவங்கள் நடப்பதைத் தடுக்க முடியாது” என்றனர்.