இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டனத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடிய இரட்டை சதம் அடித்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் 35 ரன்கள் கூட அடிக்காத நிலையில் தனி ஒரு பிளேயராக இந்திய அணியை இரட்டை சதம் அடித்து வலுவான நிலைக்கு எடுத்துச் சென்றுள்ளார் அவர். இதனால் ஜெய்ஷ்வாலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 179 ரன்களுடன் களத்தில் இருந்த ஜெய்ஸ்வால், இரண்டாவது நாளில் நிதானமாக ஆடிக் கொண்டிருந்தார். ஆனால் மறுமுனையில் அடுத்தடுத்து விக்கெட் விழுந்ததால் ஜெய்ஷ்வால் இரட்டை சதம் அடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எகிறியது. 191 ரன்கள் எடுத்திருந்தபோது ஸ்டிரைக் பக்கம் வந்த ஜெய்ஸ்வால் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்து தன்னுடைய முதல் இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் பல்வேறு சாதனைகளையும் அவர் படைத்திருக்கிறார். இளம் வயதில் இந்திய அணிக்காக இரட்டை சதம் அடித்த வினோத் காம்பிளி, கவாஸ்கர் ஆகியோரின் பட்டியலில் தன்னுடைய பெயரையும் இணைத்துக் கொண்டுள்ளார்.
குறைந்த இன்னிங்ஸில் இரட்டை சதம் அடித்தவர் இந்திய பிளேயர்கள் பட்டியலிலும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெயர் இடம்பிடித்துள்ளது. இந்த நிலையில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் குறித்து 162 வாரங்களுக்கு முன்பு ரோகித் சர்மா பதிவு செய்த இன்ஸ்டாகிராம் போஸ்ட் இப்போது வைரலாகிக் கொண்டிருக்கிறது. 162 வாரங்களுக்கு முன்பு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’அடுத்த சூப்பர் ஸ்டார்’ என ஜெய்ஸ்வாலை ரோகித் சர்மா பாராட்டியுள்ளார். இதனை தோண்டி எடுத்து ரசிகர்கள் இப்போது வைரலாக்கிக் கொண்டிருக்கின்றனர்.
View this post on Instagram
யஷஸ்வி ஜெய்ஷ்வால் இரட்டை சதம் அடித்த பிறகு பேசும்போது, ” நான் கடைசி வரை களத்தில் இருக்க வேண்டும் என விரும்பினேன். அதனை செய்திருக்கிறேன். இரட்டை சதம் அடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அதனால் ஸ்டிரைக் கிடைக்கும்போதெல்லாம் அடிக்கக்கூடிய பந்துகளை பவுண்டரி சிக்சர்களாக அடித்துக் கொண்டேன். இது எனக்கு மிக்க மகிழ்ச்சி” என தெரிவித்தார்.