ஜேர்மன் தூதுவர் பெலிக்ஸ் நியூமன் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்தார்

இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் பெலிக்ஸ் நியூமன் (Felix Neumann) சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை அண்மையில் (31) பாராளுமன்றத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார்.

எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஜேர்மன் பாராளுமன்ற உறுப்பினர்களின் தூதுக்குழுவினர் இலங்கைக்கு மேற்கொள்ளவுள்ள விஜயம் தொடர்பில் ஜேர்மன் தூதுவர் பெலிக்ஸ் நியூமன் சபாநாயகருக்கு அறிவித்தார். அத்துடன், இலங்கை – ஜேர்மன் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தைப் புதுப்பிப்பது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், இதன்மூலம் இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்த முடியும் என ஜேர்மன் தூதுவர் குறிப்பிட்டார்.

இலங்கையிலுள்ள ஜேர்மன் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனங்களில் பெற்றுக்கொண்ட தொழிற்கல்வி மூலம் இலங்கை இளைஞர்களுக்குப் பல்வேறு பயன்கள் கிடைத்துள்ளதாகவும், விசேடமாக அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் தொழில் பெற்றுள்ளதாகவும் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். அத்துடன், இந்தப் பயிற்சி நிறுவனங்களின் மூலம் அதிக இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தொழிநுட்பம் சார்ந்த புதிய பயிற்சி நெறிகளை உள்ளடக்க வேண்டியதன் தேவையை சபாநாயகர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அதற்கு மேலதிகமாக, இரண்டு நாடுகளினதும் அரசியல் மற்றும் பொருளாதாரம் விடயங்கள் தொடர்பிலும் இரு தரப்பினருக்குமிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.