சென்னை: நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிக்கு பிறப்பித்த சம்மனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பிப்.5-ம்தேதி விசாரணைக்கு ஆஜராகஅவருக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என்றும், இந்த விவகாரத்தில் சட்டத்துக்குட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தரப்பில் உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
யூடியூபில் வீடியோ: துப்பாக்கி தயாரிப்பது குறித்து யூடியூபில் வீடியோ வெளியிட்டதாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இரு பொறியியல் பட்டதாரிகள் மீது என்ஐஏ வழக்கு பதிவு செய்திருந்தது. சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கின் அடிப்படையில், நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு என்ஐஏ சம்மன் அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக அவர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தியது.
இந்நிலையில், என்ஐஏ அனுப்பியுள்ள சம்மனை ரத்து செய்யக்கோரி நாம் தமிழர் கட்சியின் இளைஞரணி அமைப்பாளரான இடும்பாவனம் கார்த்திக், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின்செயல்பாடுகளை முடக்கும் வகையிலும், நாம் தமிழர் கட்சியினருக்கும், அனுதாபிகளுக்கும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும் இந்த சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தேசிய புலனாய்வு முகமையின் விசாரணைக்கு ஆஜராகி ஒத்துழைப்பு வழங்க கட்சியின்ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட அனைவரும் தயாராக இருக்கிறோம். ஆனால், இதற்கு உரிய காலஅவகாசம் வழங்க வேண்டும். நாட்டின் பாதுகாப்பு, ஒருமைப்பாடு, சட்டம் ஒழுங்குக்கு ஊறுவிளைவிக்கும் வகையில், நாம் தமிழர் கட்சியினர் எந்தவொரு தேச விரோத, சமூகவிரோத செயல்களிலும் ஈடுபட்டதில்லை. எனவே, என்ஐஏ அனுப்பியுள்ள சம்மனை ரத்து செய்ய வேண்டும்’ என கோரியிருந்தார்.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில், மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் சேவியர் பெலிக்ஸ், சங்கர் ஆகியோர் ஆஜராகி முறையீடு செய்தனர். அப்போது, ‘‘வெளியூரில் உள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கும் காலையில் சம்மன் அளித்துவிட்டு உடனடியாக சென்னையில் உள்ள அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக அறிவுறுத்தியுள்ளனர். சில இடங்களில் சோதனையும் நடத்தியுள்ளனர். எனவே இந்த சம்மனை ரத்து செய்ய வேண்டும்’’ என கோரினர்.
அப்போது என்ஐஏ தரப்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், ‘‘மனுதாரர் தனதுமனுவில் வரும் பிப்.5-ம் தேதிவிசாரணைக்கு ஆஜராக அவகாசம் கோரியுள்ளார். தற்போதையசூழலில் மனுதாரரை விசாரணைக்குத்தான் அழைத்துள்ளோம், கைது செய்யும் நோக்கம் இல்லை. அவர் பிப்.5-ல் விசாரணைக்கு ஆஜராகலாம். மனுதாரருக்கு எதிராக சட்டத்துக்குட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்’’ என உத்தரவாதம் அளித்தார். அதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டுள்ளனர்.