புத்தாண்டு லாட்டரி குலுக்கல்: சபரிமலைக்கு வந்த புதுச்சேரி அய்யப்ப பக்தருக்கு ரூ.20 கோடி பரிசு

திருவனந்தபுரம்,

கேரள அரசின் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பம்பர் லாட்டரி குலுக்கல் கடந்த 24-ந்தேதி நடைபெற்றது. அந்த லாட்டரியின் ஒரு சீட்டின் விலை ரூ.400 ஆகும். மொத்தம் 45 லட்சம் சீட்டுகள் விற்பனையாகி இருந்தன. இந்த குலுக்கலில் முதல் பரிசு ரூ.20 கோடி எக்ஸ் சி 224091 என்ற எண் கொண்ட லாட்டரி சீட்டுக்கு கிடைத்து இருந்தது.

இந்த எண் கொண்ட லாட்டரி சீட்டு பாலக்காட்டில் மொத்த விற்பனையாளரிடம் இருந்து வாங்கி வந்து திருவனந்தபுரத்தில் உள்ள கடையில் விற்பனை செய்யப்பட்டு இருந்தது உறுதி செய்யப்பட்டது. ஆனாலும் முதல் பரிசு பெற்ற அந்த அதிர்ஷ்டசாலி யார்? என்ற விவரம் தெரியாமல் இருந்தது.

இந்த நிலையில் சபரிமலைக்கு வந்த புதுச்சேரியை சேர்ந்த 33 வயதான பக்தர் தரிசனத்தை முடித்து விட்டு திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலுக்கு வந்தபோது இந்த அதிர்ஷ்ட சீட்டை வாங்கியதாக கூறியுள்ளார். மேலும் அவர், தனது பெயர் விவரங்களை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனால், கேரள லாட்டரி இயக்குனரகமும் அவரது பெயரை வெளியிட மறுத்து விட்டது. நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு தனது நண்பர்களுடன் லாட்டரி இயக்குனரக அலுவலகத்திற்கு வந்த அந்த வாலிபர் முதல் பரிசு கிடைத்த அந்த லாட்டரி சீட்டை அலுவலகத்தில் ஒப்படைத்து சான்றிதழ் பெற்றுக் கொண்டார். ரூ.20 கோடி பரிசு தொகையில், அதிர்ஷ்டசாலியான அய்யப்ப பக்தருக்கு வரி நீங்கலாக ரூ.12.60 கோடி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.