பெங்களூரு : எம்.எல்.ஏ., லட்சுமண் சவதியை, காங்கிரசில் தக்கவைக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
கர்நாடகாவில் பா.ஜ., ஆட்சியில் இருந்தபோது, துணை முதல்வராக இருந்தவர் லட்சுமண் சவதி. கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ‘சீட்’ கிடைக்காததால், காங்கிரஸ் பக்கம் தாவினார்.
பெலகாவி அதானி தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு 80,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். லிங்காயத் சமூக தலைவரான இவருக்கு, வட மாவட்டங்களில் நல்ல செல்வாக்கு உள்ளது. அவரை வைத்து லோக்சபா தேர்தலில், லிங்காயத் ஓட்டுகளுக்கு, காங்கிரஸ் குறி வைத்துள்ளது.
இந்நிலையில், லட்சுமண் சவதியை மீண்டும், பா.ஜ.,வுக்கு அழைத்துச் செல்லும் முயற்சிகள் நடந்து வருகின்றன. பா.ஜ., – எம்.பி., அன்னாசாகேப், முன்னாள் எம்.பி., ரமேஷ் கட்டி ஆகியோர், லட்சுமண் சவதியுடன் தொடர்ந்து பேச்சு நடத்தி, அவரது மனதை மாற்றும் வேலையில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் காங்கிரஸ் மேலிடம் உஷாராகி உள்ளது.
‘நீங்கள் என்ன செய்வீர்களோ, எது செய்வீர்களோ தெரியாது. லட்சுமண் சவதியை கட்சியில் தக்கவைக்க வேண்டும்’ என, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமாருக்கு, கட்சி மேலிடம் உத்தரவிட்டு உள்ளது. இதனால் அவர்கள் இருவரும் தினமும், லட்சுமண் சவதியுடன் மொபைல் போனில் பேசி வருகின்றனர்.
லட்சுமண் சவதியிடம் மொபைல் போனில் பேசியுள்ள, கர்நாடகா காங்கிரஸ் பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, ‘உங்களுக்கு உரிய நேரத்தில் அமைச்சர் பதவி தருகிறோம். கட்சியை விட்டு விலக வேண்டும் என நினைக்காதீர்கள்’ என, கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்னும் ஒரு சில நாட்களில் கர்நாடகா வரும், ரன்தீப்சிங் சுர்ஜேவாலாவை சந்தித்து, சில கோரிக்கைகளை முன்வைக்கவும், லட்சுமண் சவதி தயாராகி வருகிறார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்