சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் மற்றும் மனிதநேய அறக்கட்டளையின் நிறுவனர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி (45). சுற்றுலா சென்றதாகக் கூறப்படும் நிலையில், அவர் சென்ற கார் இமாச்சலப் பிரதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியிருக்கிறது.

வெற்றி துரைசாமி தொழிலதிபர் இயக்குநர் என பன்முகம் கொண்டவர். விதார்த், ரம்யா நம்பீசன் நடிப்பில், ‘என்றாவது ஒருநாள்’ என்ற படத்தையும் இயக்கியிருக்கிறார். இயக்குநர் வெற்றிமாறனிடம் டைரக்ஷன் பயின்றவர் வெற்றி. அவரைப் பற்றி படத்தின் நாயகனான விதார்த்திடம் பேசினேன்.
”வெற்றி சாரோட கார் விபத்தாகிடுச்சுனு காலையில செய்தி கேள்விப்பட்டதும் அதிர்ச்சியில் உறைஞ்சிட்டேன். ரொம்பவே நல்ல மனிதர். காலையில இருந்து மனசே சரியில்லை. இன்னமும் மன வேதனையில்தான் இருக்கேன். அவர் சீக்கிரமே திரும்பி வருவார்னு நம்புறேன். வெற்றி சாரோட இயக்கத்தில் ‘என்றாவது ஒருநாள்’னு ஒரு படம் நடிச்சிருக்கேன்.
ஆரம்பத்தில் இது ஒருமணி நேரம் ஓடக்கூடிய குறும்படமாகத்தான் வெற்றி சார் இயக்கியிருந்தார். அப்புறம் படத்தை இளையராஜா சார்கிட்ட காட்டினார். படத்தை பார்த்த ராஜா சார், நெகிழ்ந்ததுடன் ‘இதை முழுநீள படமாகவே பண்ணலாம்’னு சொல்லியிருக்கிறார். அதன்பிறகே வெற்றி சார் படமா பண்ணினார். மேற்கொண்டு ஒன்பது நாட்கள் நடித்து கொடுத்தேன். இது அவருக்கு முதல் படம்னு சொல்ல முடியாத அளவிற்கு மிகத் தேர்ந்த இயக்குநர் போல, படத்தை இயக்கினார். அவரது மேக்கிங் ஸ்டைல் பிரமிக்க வச்சிடுச்சு. படப்பிடிப்பு நடந்த ஒன்பது நாட்களுமே மூன்று கேமராக்கள் வச்சு எடுத்தார்.

கணவன் – மனைவி- குழந்தை – குடும்பம், மாடுவளர்ப்புனு ஒரு அழகான கிராமிய பின்னணி கொண்ட கதை அது. இதுவரைக்கும் 35 சர்வதேச விருதுகளுக்கு அனுப்பி வச்சிருக்கார். அத்தனையிலும் வரவேற்பு கிடைச்சிருக்கு. நாங்க மீண்டும் இணைந்து வெப்சீரிஸ் ஒண்ணு பண்ணலாம்னு திட்டமிட்டோம். அதுவும் பிரமாதமான கதை. என் நலனில் ரொம்பவும் அக்கறை உள்ளவர். சீக்கிரமே அவர் திரும்பி வருவார். வந்ததும் வெப் சீரீஸை தொடங்குவோம். அவரது இயக்கத்தில் மீண்டும் நடிக்கக் காத்திருக்கேன்!” என்கிறார் உருக்கமாக!