வாஷிங்டன்: ஏமனில் ஹவுதி பயங்கரவாதிகளின் ஆயுதக் கிடங்குகளை குறிவைத்து அமெரிக்கா, பிரிட்டன் உட்பட, 10 நாடுகளின் கூட்டுப் படையினர் வான்வழி தாக்குதல் நடத்தினர்.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனர்கள் வசிக்கும் காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையேயான போர், 100 நாட்களை கடந்து நீடித்து வருகிறது.
இந்த போரில், ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக ஏமனின் ஹவுதி பயங்கரவாத படை செயல்படுகிறது. இவர்கள், காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தவில்லை என்றால், செங்கடல் வழியாக இஸ்ரேல் சென்று வரும் சரக்கு கப்பல்களை தாக்குவோம் என அறிவித்தனர்.
அதன்படி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் பல சரக்கு கப்பல்களை, ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்கள் வாயிலாக தாக்கி வருகின்றனர்.
இதனால், செங்கடல் வர்த்தக வழியை பாதுகாக்க பிரான்ஸ், பிரிட்டன் உட்பட 10 நாடுகளுடன் இணைந்து, ஹவுதி எதிர்ப்பு படையை அமெரிக்கா உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், ஹவுதி பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதிகள் மீது, இந்த கூட்டுப் படையினர் நேற்று வான்வழி தாக்குதலை நடத்தினர்.
ஹவுதி பயங்கரவாத அமைப்பின் ஆயுத சேமிப்பு கிடங்குகள், ஏவுகணைகள் உட்பட 13 இடங்களை கண்டறிந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
இது குறித்து, அமெரிக்க ராணுவ அமைச்சர் லாய்டு ஆஸ்டின் கூறுகையில், ”இந்த தாக்குதல் வாயிலாக, ஹவுதி அமைப்பினருக்கு கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளோம்,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement