'அப்பல்லோ' பிரதாப் ரெட்டியின் வாழ்க்கை கதையில் ராம்சரண் நடிப்பாரா…? – மனைவி உபாசனா பதில்

புகழ்பெற்ற அப்பல்லோ மருத்துவ குழுமத்தை உருவாக்கியவர் பிரதாப் ரெட்டி. இவரது வாழ்க்கை வரலாற்றையும், அப்பல்லோ நிர்வாகம் வளர்ந்த விதத்தையும் நிம்மி சாக்கோ என்பவர் 'அப்போலோ ஸ்டோரி' என்ற புத்தகமாக எழுதியுள்ளார். பிரதாப் ரெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. புத்தகத்தை வெளியிட்டு நடிகர் ராம்சரணின் மனைவியும், பிரதாப் ரெட்டியின் பேத்தியுமான உபாசனா பேசியது:

எங்களுடைய தாத்தாவின் பிறந்த நாளான இன்று எங்களுக்கு மிகவும் உணர்வுபூர்வமான நாள். இன்று வெளியிடப்பட்டிருக்கும் 'அப்போலோவின் கதை' எனும் புத்தகத்தில் ஒரு மனிதனின் சாதனைப் பயணம் எழுதப்பட்டிருக்கிறது. இந்த புத்தகம் தந்தையானவர், தன்னுடைய மகள்களின் மீது வைத்த நம்பிக்கையின் வெளிப்பாடு. இந்த புத்தகம் அவரின் தொழில் வாழ்க்கையையும், சொந்த வாழ்க்கையும் எப்படி சமாளித்து வெற்றிப் பெற்று சாதனை படைத்தார் என்பது இடம்பெற்றிருப்பது சிறப்பானது. அவருடைய பெண் வாரிசுகளான நாங்கள், மருத்துவ துறையில் அவர் உருவாக்கிய சாம்ராஜ்யத்தை மேலும் விரிவுப்படுத்தவும், அவர் காட்டிய பாதையில் சொந்த வாழ்க்கையையும், தொழில் ரீதியிலான வாழ்க்கையும் திறம்பட சமாளித்து அவரின் கனவை நனவாக்கவும் கடுமையாக உழைத்து வருகிறோம். இந்த புத்தகம் ஒவ்வொரு மகள்கள் மீதும் அவர்களது தந்தை வைத்திருக்கும் அன்பின் வெளிப்பாடு. என்றார்.

இதை தொடர்ந்து, பிரதாப் ரெட்டியின் வாழ்கை சினிமாவாக எடுக்கப்படுமா, அதில் உங்கள் கணவர் ராம் சரண் நடிப்பாரா என்ற கேள்விக்கு பதிலளித்த உபாசனா “கண்டிப்பாக அதை பான் இந்தியா படமாக எடுக்கலாம். எதிர்காலத்தில் நடக்கும். அதில் எனது கணவர் ராம்சரண் நடிப்பாரா என்பதை நான் தீர்மானிக்க முடியாது. அதை படத்தின் இயக்குனர்தான் தீர்மானிப்பார்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.