என்.ஐ.ஏ விசாரணை வளையத்துக்குள் வந்திருக்கிறது நாம் தமிழர் கட்சி. சோதனை, விசாரணை என வழக்கை அடுத்த கட்டத்துக்கு வேக வேகமாக நகர்த்துகிறது என்.ஐ.ஏ. தேர்தல் நெருங்குவதால் பா.ஜ.க பழிவாங்குகிறது என நாம் தமிழர் தரப்பு நம்பினாலும், முகாந்திரமில்லாமல் என்.ஐ.ஏ கை வைக்காது என்கிறது பா.ஜ.க தரப்பு. என்ன நடக்கிறது?

சேலம் ஓமலூரில் 2022 மே மாதம் ஆயுதங்களுடன் தமிழ்நாடு காவல்துறையிடம் சஞ்சய் பிரகாஷ், நவீன் சக்கரவர்த்தி என்பவர்கள் கைதாகினர். விசாரணைக்கு பிறகு கபிலன் என்பவரும் கைது செய்யப்பட்டார். வழக்கின் தன்மைகேற்க இந்த வழக்கு என்.ஐ.ஏ-க்கு கைமாற்றப்பட்டது. அதில் விடுதலை புலிகள் இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு அதற்கு இணையான ஒரு அமைப்பை நிறுவ முயலும் வேலையில் மூவரும் ஈடுபடுவதாக கண்டறியப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் வீட்டில் சோதனை நடத்தியுள்ளது என்.ஐ.ஏ. கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகனின் வீடு உள்ள 7 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 1 லேப்டாப், 7 செல்போன் மற்றும் 8 சிம் கார்டுகள் பிடிபட்டதாக தெரிகிறது. இதோடு சோதனைக்குள்ளானவர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக் உள்ளிட்டோருக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது.
“விடுதலை புலிகள் அமைப்புடன் நாம் தமிழர் நிர்வாகிகள் தொடர்பில் இருப்பதாலும், அவர்களிடமிருந்து நிதி பெறுவதாலும்தான் சோதனை மேற்கொண்டதென எங்குமே என்.ஐ.ஏ சொல்லவில்லை. ஆனால் அதனை மையமாக வைத்து பா.ஜ.க-வினர் வதந்தி பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே அரசியல் பழிவாங்கல் என்பதற்கு ஒரே சான்று” என்கிறார்கள் நா.த.க-யினர் சிலர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க மாநில பொருளாளர் எஸ்.ஆர் சேகர் “என்.ஐ.ஏ-வின் சோதனையை பழிவாங்கல் நடவடிக்கை எனப் பேசுவதெல்லாம் ஒப்பாரி. என்.ஐ.ஏ போன்ற அமைப்பு ஆதாரங்கள் இல்லாமல் ஒரு அடிகூட எடுத்து வைக்காது. நாம் தமிழர் பிரபாகரனை ஆதரித்து பேசி இளைஞர்களை தங்கள் வலைக்குள் கொண்டுவந்த கட்சி. பிரபாகரனை வைத்து பணம் சம்பாதிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது.
மேலும் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட அமைப்பை மேற்கொண்டு எடுத்துச் செல்வது என்பது தேச விரோதமானது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அந்த நச்சு மரம் அகற்றப்பட வேண்டும். ஒருவேளை அவர்கள்மீதான குற்றசாட்டுகள் நிரூபணமாகிறபோது இந்தியா அரசால் அந்த கட்சி தடைசெய்யப்படும்” எனப் அதிர்ச்சி கிளப்பினார்.

இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், “தேசத்தின் ஒற்றுமை அல்லது தேசத்திற்கு எதிரான செயல்களில் நாம் தமிழர் கட்சியினர் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்பதை என்ஐஏ சோதனை காட்டி கொடுத்துள்ளது. என்ஐஏ நாம் தமிழர் கட்சியின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்த பிறகு நாட்டிற்கு எதிரான செயல்கள் செய்திருப்பதை உறுதிப்படுத்தி உள்ளனர். என்ஐஏ தேசத்திற்கும், தேச ஒற்றுமைக்கும் எதிராக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. நாம் தமிழர் கட்சி தேசத்திற்கு எதிராக செயல்பட்டு கொண்டிருப்பதை இது காட்டுகிறது.
இந்த நாட்டை பாதுகாக்கும் மிக முக்கியமான அமைப்பு என்ஐஏ. இது நாட்டில் தீவிரவாதம், பயங்கரவாதம், தேச ஒற்றுமையை சீர்குலைப்பவர்களை கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அமைப்பாக உள்ளது. அந்த அமைப்பு அவர்களது வேலையை சிறப்பாக செய்து கொண்டிருக்கின்றனர். தவறு செய்பவர்களிடம் கேள்வி கேட்கும்போது, ‘என்னை மிரட்டுகிறார்கள், என்னை காப்பாற்றுங்கள்’ என அலறுவார்கள். அதைதான் இப்போது தவறு செய்தவர்கள்செய்கிறார்கள்.” என்றிருக்கிறார்.

நம்மிடம் பேசிய நா.த.க-வின் மாநில ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பர்கானா, “நாம் தமிழர் கட்சி அசுர பலத்துடன் வளர்ந்து வருவதால் எரிச்சல் அடைந்திருக்கும் பாசிக பா.ஜ.க-வின் பழிவாங்கல் நடவடிக்கை இது. இப்படியான ரெய்டு அச்சுறுத்தலுக்கெல்லாம் அஞ்சும் இயக்கமல்ல நாம் தமிழர். மேலும் இதனால் மக்கள் மத்தியில் நாம் தமிழர் கட்சிக்கு களங்கும் விளைவிக்கலாம் என்ற முயற்சியும் பலிக்கப்போவதில்லை. மாறாக நாம் தமிழர் பெருவெற்றிபெறும். என்.ஐ.ஏ நடத்திய இந்த ரெய்டு மூலம் இவ்வளவு காலம் எங்களை பா.ஜ.க-வின் ’பி’ என்ற பொய் பிரசாரம் தவிடுபொடியாகியுள்ளது” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY