தமிழக பாஜக; `ஒற்றை அதிகாரம்' – டெல்லி அசைன்மென்ட்… யார் இந்த குருவாயூர் மேனன்?!

தமிழக பா.ஜ.க-வின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் அரவிந்த் மேனன். “கூட்டணி கட்சிகளுடன் சீட் பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு, தேர்தல் வியூகம் என தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் அனைத்தையும் இனி மேனன்தான் கவனிக்கப் போகிறார்” என்கிறார்கள் கமலாலய வட்டாரத்தில். அதற்கேற்ப தமிழகம் முழுவதும் சத்தமில்லாமல் சுற்றுப்பயணமும் செய்யத் தொடங்கிவிட்டார் மேனன். யார் இந்த அரவிந்த் மேனன்…. நாமும் விசாரித்தோம்.

கேரள மாநிலம் குருவாயூர் தான் அரவிந்த் மேனனுக்கு சொந்த ஊர். சிறு வயதிலேயே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர், வாரணாசியில் படிப்பை முடித்துவிட்டு, மத்திய பிரதேச மாநிலம் இந்தோருக்கு குடிபெயர்ந்தார். 2003-ல், இந்தோர் நகருக்கான ஆர்.எஸ்.எஸ் பிரசாகராக நியமிக்கப்பட்டவர், அடுத்த 13 ஆண்டுகளில் மத்திய பிரதேசத்தின் அசைக்க முடியாத அதிகார மையமாக உருவானார் என்கிறார்கள் பா.ஜ.க வட்டாரத்தில்.

அரவிந்த் மேனன்

நம்மிடம் பேசிய பா.ஜ.க-வின் சீனியர் தலைவர்கள் சிலர், “பிறப்பால் ஒரு மலையாளியாக இருந்தாலும், வாரணாசியில் பல ஆண்டுகள் இருந்ததால், இந்தி மொழி பேசவும் எழுதவும் அரவிந்த் மேனனுக்கு நன்றாகவே தெரியும். அதேகாலக்கட்டத்தில், பெங்காலி மொழியையும் பயின்றிருந்தார். இந்தோர் நகரிலிருந்துதான் மேனனின் ஆரம்பகால அரசியல் பணி தொடங்கியது. குருவாயூரிலிருந்து வந்ததால், ‘குருவாயூர் மேனன்’ என்றுதான் அவரை அழைப்பார்கள். பின்னாளில் அந்த பெயரே அவரது அடையாளமாகிப் போனது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உதவி செயலாளராக பணி உயர்வு பெற்றவர், ஜபல்பூர் ஏரியாவுக்கான பொறுப்பாளராக நியமனமானார். அப்போதுதான், ஆர்.எஸ்.எஸ் உயர் பொறுப்பில் இருந்தவர்களுடன் அவருக்கு நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது. பா.ஜ.க-வின் இளைஞரணி தலைவராக சிவராஜ் சிங் செளகான் இருந்தபோது, அணியின் செயலாளராகவும் பணியாற்றினார். அந்த நட்பு, மத்திய பிரதேச அரசியலையே மாற்றியது.

2011-ல், மத்திய பிரதேச பா.ஜ.க-வின் அமைப்பு பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார் அரவிந்த் மேனன். கட்சியை பலப்படுத்தும் பணிகளில் அவர் தீவிரம் காட்டிய நேரத்தில், ஒரு பெண் விவகாரமும் அவர்மீது வெடித்தது. ‘என்னை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிவிட்டார் மேனன். அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் புகாரளித்தால் ஜபல்பூர் போலீஸார் ஏற்க மறுக்கிறார்கள்’ என மாநில மனித உரிமை ஆணையத்தில் ஒரு பெண் புகாரளிக்கவும், விவகாரம் மாநில அரசியலில் பற்றி எரிந்தது.

ஜபல்பூர் போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்பியது மாநில மனித உரிமை ஆணையம். கடைசியில், ‘அந்தப் பெண்ணை கண்டுபிடிக்க முடியவில்லை, அவர் எந்த காவல் நிலையத்தில் புகாரளித்தார் எனவும் தெரியவில்லை’ என போலீஸார் கைவிரித்தனர். ‘மேனன் மீது சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என காங்கிரஸ் கட்சி போர்க்கொடி தூக்கியும், அந்த விவகாரம் அத்தோடு அமுங்கிப் போனது.

அடுத்துவந்த 2013 சட்டமன்றத் தேர்தலில், மேனன் – செளகான் கூட்டணி பா.ஜ.க-வை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தியது. அந்தத் தேர்தலில் 165 தொகுதிகளில் வெற்றிப்பெற்றது பா.ஜ.க. முதல்வராக சிவராஜ் சிங் செளகான் பதவியேற்றார். கட்சியின் மாநிலத் தலைவராக நந்த குமார் சிங் செளகான் இருந்தாலும், அதிகாரமெல்லாம் அமைப்பு பொதுச்செயலாளரான அரவிந்த் மேனனிடம்தான் குவிந்திருந்தது.

அரவிந்த் மேனன் – அண்ணாமலை

அதுவே, கைலாஷ் விஜய்வர்கியா போன்ற சீனியர்களுக்கு பிடிக்கவில்லை. முட்டல் மோதல்கள் எழத் தொடங்கின. ‘கட்சியில் அரவிந்த் மேனன் வைப்பதுதான் சட்டமா…’ எனக் கலகக்குரல்கள் எழும்பின. ஆனால், முதல்வர் சிவராஜ் சிங் செளகானின் பரிபூரண ஆசி இருந்ததால், அரவிந்த் மேனனை யாராலும் அசைக்க முடியவில்லை. அந்த மனமாச்சரியத்தில், மத்திய பிரதேச அரசியலில் இருந்தே ஒதுங்கி, மேற்கு வங்க மாநிலத்தின் பொறுப்பாளராக கிளம்பிச் சென்றார் விஜய்வர்கியா. நாள்கள் செல்லச் செல்ல, மேனன் – செளகான் இருவரும் மொத்த மாநிலத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். அதை டெல்லி ரசிக்கவில்லை.

மோடி, அமித் ஷா, பாஜக

ஏப்ரல், 2016-ல் மத்திய பிரதேசத்திலிருந்து டெல்லி தலைமையிடத்திற்கு அதிரடியாகத் தூக்கியடிக்கப்பட்டார் அரவிந்த் மேனன். அதை யாருமே எதிர்பார்க்கவில்லை. டெல்லியில், கட்சியின் தேசிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். கட்சியினுடைய 29 குழுக்களை மேற்பார்வை செய்யும் பொறுப்பு அவரிடம் வழங்கப்பட்டது. பல மாதங்கள் சத்தமில்லாமல் அமைதியாக இருந்தவருக்கு, குஜராத் சட்டமன்றத் தேர்தலை கவனிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. அடுத்ததாக, மேற்குவங்க துணை பொறுப்பாளராக நியமனமானார். சர்ச்சைகள், புகார்கள் எனப் பல விவகாரங்களில் அரவிந்த் மேனன் சிக்கினாலும், பூத் கமிட்டிகள் அமைப்பதிலும், அதனை செயல்பாட்டுக்கு கொண்டுவருவதிலும் திறமைசாலி அவர்.

மேற்கு வங்கத்தில் பூத் கமிட்டி அமைப்பதற்காக கிராமம் கிராமமாக அவர் சென்றபோது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அவரை தொடர்ந்து தாக்கினார்கள். ஒரு ஹோட்டலுக்குள் புகுந்து கொலைவெறியோடு தாக்குதல் நடத்தியதெல்லாம் பெரிதாகப் பேசப்பட்டது. அதையெல்லாம் கடந்துதான், 2018-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, அம்மாநிலத்தில் 18 தொகுதிகளில் பா.ஜ.க-வை வெற்றிப்பெற வைத்தார் மேனன்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நெருக்கமான அவரைத்தான், தமிழகத்திற்கான தேர்தல் பொறுப்பாளராக நியமித்திருக்கிறது பா.ஜ.க மேலிடம். தமிழகத்திற்குள் வந்தவுடன் அவர் கேட்ட முதல் கேள்வியே, ‘பூத் கமிட்டிகள் எவ்வளவு இருக்கின்றன… எங்கேயெல்லாம் நாம் வீக்காக இருக்கிறோம்’ என்பதுதான்.

அரவிந்த் மேனன்

நாடாளுமன்றத் தேர்தலுக்குள் பூத் கமிட்டிகள் அமைக்கப்படாத இடங்களிலும், கமிட்டிகள் அமைக்கும் பணியை வேகப்படுத்த உத்தரவிட்டிருக்கிறார் மேனன். தேர்தல் பொறுப்பாளராக அவர் நியமிக்கப்பட்டிருப்பதால், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கும் அவர்தான் பொறுப்பாளராக இருப்பார் எனத் தெரிகிறது. அதேநேரத்தில், கட்சியின் மேலிட துணை பொறுப்பாளர் பொறுப்பும் அவருக்கு கூடுதலாக வழங்கப்பட்டிருக்கிறது” என்றனர் விரிவாக.

2017 குஜராத் சட்டமன்றத் தேர்தலில் ஒன்றாக பணிபுரிந்தபோதுதான், அரவிந்த் மேனனும் அமித் ஷாவும் மிக நெருக்கமாகியிருக்கிறார்கள். அப்போதிருந்தே, பா.ஜ.க வலுவில்லாத மாநிலங்களுக்கு மேனனை பொறுப்பாளராக நியமிப்பதை வழக்கமாக்கியிருக்கிறாராம் அமித் ஷா. மேற்குவங்கத்தை தொடர்ந்து, தெலங்கானாவுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார் மேனன். ஆனால், அங்கு எதிர்பார்த்த ரிசல்ட்டை நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க பெறவில்லை. இந்தச் சூழலில்தான், தமிழக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் மேனன். சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்தாதவர், களப்பணியில் தீவிரம் காட்டுபவர் என அவரைப் பற்றி பல விஷயங்களைச் சொல்கிறார்கள் கட்சி வட்டாரத்தில்.

அண்ணாமலை

நம்மிடம் பேசிய பா.ஜ.க சீனியர் தலைவர் ஒருவர், “தமிழக பா.ஜ.க-வை பொறுத்தவரை, ஒன் மேன் ஆர்மியாக கட்சியை அண்ணாமலைதான் வழிநடத்தி வருகிறார். ஆனால், பூத் கமிட்டிகளும் இரண்டாம் கட்ட தலைவர்களும் கட்சிக்குள் வலுப்பெறவில்லை. அதைச் சரிசெய்வதைத்தான் முதல் பணியாக கையில் எடுத்திருக்கிறார் அரவிந்த் மேனன். அ.தி.மு.க., காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 15 பேரை கட்சியில் இணைத்ததும் அந்த வகையில்தான். கூட்டணிக் கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துவதில் தொடங்கி, தொகுதிவாரியாக ஆய்வுக் கூட்டங்கள் நடத்துவது வரை அனைத்தையும் தன் கன்ட்ரோலுக்கு எடுத்திருக்கிறார் குருவாயூர் மேனன். ஆர்.எஸ்.எஸ் அமைப்பில், 22 வருடம் அனுபவம் பெற்றவர். அவருடைய என்ட்ரி அண்ணாமலையின் ஒற்றை அதிகாரத்திற்கு ‘செக்’ வைக்கும் விதமாகவும் அமைந்திருக்கிறது” என்றார்.

தமிழக பா.ஜ.க ஆட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. குருவாயூர் மேனன் கட்சிக்குள் என்ன மாற்றத்தை கொண்டுவரப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.