திருப்பூர்: அவிநாசி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஏ.கருப்பசாமி அதிமுகவில் தொடர்ந்து நீடிப்பதாக தெரிவித்துள்ளார். பாஜகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ-க்கள் பட்டியலில், அவிநாசியில் 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை எம்எல்ஏ-வாக இருந்த ஏ.ஏ.கருப்பசாமி பெயரும் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக ஏ.ஏ.கருப்பசாமி ‘இந்து தமிழ் திசை செய்தியாளரிடம்’ கூறியது: “காரைக்குடி முன்னாள் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பழனிசாமி, என்னை பாஜக இணைய கேட்டார். நான் இணையவில்லை என்று தெரிவித்துவிட்டேன்.
ஜெயலலிதா இந்த கட்சியில் எனக்கு பல்வேறு வாய்ப்புகளை வழங்கி உள்ளார். இந்த கட்சியை விட்டு நான் வேறெந்த கட்சிக்கும் செல்லமாட்டேன் என தெரிவித்துவிட்டேன். எப்படி பட்டியலில் என் பெயர் வந்தது என்றே தெரியவில்லை. எனக்கும் இதுவரை பாஜகவின் பட்டியல் புலப்படவில்லை. பிப்ரவரி 9-ம் தேதி பழனிசாமி அவிநாசி வருவதை ஒட்டி, அந்த பணிகளில் ஈடுபட்டுள்ளேன். என் மீது தேவையற்ற வதந்தியை பரப்பி வருகின்றனர்.ஜெயலலிதா கொடுத்த வாய்ப்புக்காக நான் என்றைக்குமே அதிமுககாரனாக மட்டுமே இருப்பேன்” என்று அவர் தெரிவித்தார்.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, கருப்பசாமி முதல்முறையாக சட்டப்பேரவையில் பேசியபோது, “கிராமத்து கோயில் பூசாரியை எம்எல்ஏ-வாக்கி அழகு பார்த்தவர் ஜெயலலிதா” என கிராமத்து மொழியில் பேசி வணங்கியதை கண்டு, அன்றைக்கு ஜெயலலிதா அவையில் வாய்விட்டு சிரித்ததை பலரும் மறக்க முடியாத ஒரு சம்பவமாக கட்சியில் இன்றைக்கும் சொல்லி வருகின்றனர்.