புதுடெல்லி: பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற பிஹார் சட்டமன்றத் தேர்தலின்போது பாஜகவோடு கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று முதல்வராக பதவியேற்ற நிதிஷ் குமார், பின்னர், அந்த கூட்டணியில் இருந்து வெளியேறி லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் கூட்டணி சேர்ந்தார். வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வலிமையான எதிர்க்கட்சிகளின் கூட்டணியை உருவாக்க முன் முயற்சி மேற்கொண்ட நிதிஷ் குமார், நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து பாட்னாவில் முதல் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதனை அடுத்து பெங்களூருவில் நடைபெற்ற இரண்டாவது ஆலோசனைக் கூட்டத்தில்தான், இண்டியா கூட்டணி என அது பெயர் பெற்றது.
இண்டியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக நிதிஷ் குமார் தேர்வு செய்யப்படுவார் என பரவலாக பேசப்பட்ட நிலையில், அதற்கான வாய்ப்பு இல்லை என்பது உறுதியானதை அடுத்து அவர் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறி, பாஜகவுடன் கூட்டணி அமைத்தார். இதனையடுத்து, ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணியின் முதல்வராக அவர் மீண்டும் பொறுப்பேற்றார். இம்முறை பாஜகவைச் சேர்ந்த சாம்ராட் சவுத்ரி, விஜய் குமார் சின்ஷா ஆகியோர் துணை முதல்வர்களாக அவருடன் சேர்ந்து பொறுப்பேற்றுக்கொண்டனர்.
9வது முறையாக பிஹார் முதல்வராக பதவியேற்ற நிதிஷ் குமார், அதனைத் தொடர்ந்து முதல்முறையாக டெல்லி வந்து பிரதமர் மோடியை இன்று சந்தித்தார். நிதிஷ் குமார் தலைமையிலான புதிய அரசு வரும் 12-ம் தேதி பிஹார் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ள நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. அதோடு, பிஹாரில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கு இம்மாதம் 27-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அது குறித்தும், பிஹார் மாநிலத்துக்கான சிறப்பு நிதி ஒதுக்கீடு குறித்தும் பிரதமர் நரேந்திர மோடியோடு, நிதிஷ் குமார் ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.