‘மியான்மரின் ரக்கைன் மாநிலத்தைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்’ – இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

புதுடெல்லி: பாதுகாப்புச்சூழல் மிகவும் மோசமடைந்து வருவதால் மியான்மரின் ரக்கைன் மாநிலத்துக்கு இந்தியர்கள் செல்ல வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாதுகாப்பு சூழல் மிகவும் மோசமடைந்து வருவதாலும், தரைவழி டெலிபோன் உள்ளிட்ட தொலை தொடர்புகளில் ஏற்பட்டுள்ள தடைகள், அத்தியாவசியப் பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறைகளைக் கருத்தில் கொண்டு இந்தியார்கள் யாரும் மியான்மரின் ரக்கைன் மாநிலத்துக்கு செல்ல வேண்டாம். ஏற்கெனவே ரக்கைனில் உள்ள இந்தியர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி மியான்மரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து ஜனநாயகத்தை மீட்டெடுக்கக் கோரி அங்கு பரவலாக வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. ரக்கைன் மாநிலம் மற்றும் நாட்டின் பல பகுதிகளில் கடந்த ஆண்டு அக்டோபர் முதல் ஆயுதம் தாங்கிய போராளி குழுக்களுக்கும் மியான்மர் ராணுவத்துக்கும் இடையே மோதல்கள் நடந்து வருகின்றன.

இரண்டு தரப்புகளுக்கும் இடையேயான மோதல் கடந்த நவம்பர் மாதம் முதல் தீவிரமடைந்து வந்ததைத் தொடர்ந்து மியான்மரின் முக்கிய நகரங்கள் மற்றும் இந்தியாவின் எல்லையோர பகுதிகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால், மிசோரம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் உள்ள இந்திய எல்லைப் பகுதிளில் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்த கவலை அதிகரித்துள்ளது.

மியான்மர் இந்தியாவுடன் தூதரக ரீதியிலான தொடர்பில் இருக்கும் அண்டை நாடுகளில் ஒன்று. இந்தியாவில் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாகாலாந்து மற்றும் மணிப்பூர் மாநிலங்கள் உட்பட வடகிழக்கு மாநிலங்களில் சுமார் 1,640 கி.மீ., தூர எல்லையை மியான்மர் பகிர்ந்து கொள்கிறது.

கடந்த வாரம் மியான்மரில் அனைத்து வன்முறைகளை நிறுத்தவும், அனைவரையும் உள்ளடக்கிய கூட்டாட்சி ஜனநாயகத்துக்கு திரும்பும்படி இந்தியா அழைப்பு விடுத்தது. பிப்.1ம் தேதி இந்தியாவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரன்திர் ஜெய்ஸ்வால் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கூறுகையில், “மின்யான்மரில் மோசமடைந்து வரும் நிலைமை எங்களை மிகவும் கவலையடைச் செய்துள்ளது. அது எங்களை நேரடியாக பாதிக்கிறது. மியான்மாரின் அண்டை மற்றும் நட்பு நாடாக, மியான்மர் அனைத்து வன்முறைகளையும் கைவிட்டுவிட்டு, அனைவரையும் உள்ளடக்கிய கூட்டாட்சி ஜனநாயகத்துக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா அறிவுறுத்துகிறது” என்று தெரிவித்திருந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.